ஆயுதங்களுடன் காரில் வந்த 3 பேர் கைது


ஆயுதங்களுடன் காரில் வந்த 3 பேர் கைது
x

ஆயுதங்களுடன் காரில் வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

செந்துறை:

சாலையில் நின்ற கார்

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடி கிராம பகுதிகளில் இரும்புலிக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதிகாலை 3 மணி அளவில் ஆனந்தவாடியில் இருந்து கீழராயம்புரம் செல்லும் சாலையில் அவர்கள் சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு கார் நின்றது.இதனால் போலீசார் அந்த காரின் அருகில் சென்று பார்த்தபோது, காருக்குள் 5 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஒருவர் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் கொளக்குடி கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(வயது 38) என்பது தெரியவந்தது. இவர் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

தேடுதல் வேட்டை

இதைத்தொடர்ந்து மற்றவர்களை விசாரிக்க முற்பட்டபோது, 4 பேரும் அந்த பகுதியில் உள்ள ஏரி பகுதியில் புகுந்து தப்பி ஓடினர். இதைக்கண்ட சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் துரிதமாக செயல்பட்டு, அவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். மேலும் கூடுதல் போலீசாரை வரவழைத்து ஏரியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

விடிய, விடிய நடந்த தேடுதல் வேட்டையில் செந்துறையை அடுத்த குழுமூர் கிராமத்தை சேர்ந்த வெள்ளையன்(21), பெரம்பலூர் மாவட்டம் பாலையூர் கிராமத்தை சேர்ந்த நவீன்குமார்(24) ஆகிய 2 பேரை போலீசார் பிடித்தனர். மேலும் அவர்கள் வந்த காரை சோதனையிட்டபோது சைக்கிள் செயின், கம்பி, கடப்பரை மற்றும் இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.

3 பேர் கைது

இது குறித்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஆனந்தவாடி டாஸ்மாக் கடையை கொள்ளையடிக்க திட்டமிட்டது, தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், காரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.இந்த சம்பவத்தில் போலீசார் துரிதமாக செயல்பட்டதால் டாஸ்மாக் கடையில் நடைபெற இருந்த கொள்ளை சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story