காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் 3 பேர் கோர்ட்டில் சரண்


காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் 3 பேர் கோர்ட்டில் சரண்
x

சுங்குவார்சத்திரம் அருகே தி.மு.க நிர்வாகி வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் தாம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

காஞ்சிபுரம்

தி.மு.க. நிர்வாகி கொலை

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட எச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் குமுதா டோம்னிக். இவர் கணவர் டோமினிக் தி.மு.க.வில் மாவட்ட பொறுப்பில் உள்ளார். இவரது மகன் ஆல்பர்ட் (வயது 30). இவர் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் தி.மு.க. இளைஞரணி பொறுப்பில் இருந்தார். மேலும் ஆல்பர்ட் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் கட்டுமான பணி மற்றும் ஸ்கிராப் எனப்படும் தொழில் சாலை கழிவு பொருட்கள் எடுப்பது போன்ற தொழில் செய்து வந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மர்ம நபா்கள் ஆல்பர்ட் மீது நாட்டு வெடிகுண்டு வீசி பின்னர் படுகாயமடைந்த அவரை அறிவாளால் சரமாரியாக தலையில் வெட்டி கொடூரமாக கொலை செய்து தப்பி சென்றனர்.

3 பேர் கோர்ட்டில் சரண்

இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாஸ் மேற்பார்வையில் கொலையாளிகளை விரைந்து பிடிக்க 4 தனி படை அமைக்கபட்டது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வந்த நிலையில் நேற்று தாம்பரம் கோர்ட்டில் சென்னை அடுத்த குரோம்பேட்டை தர்காஸ் பகுதியை சேர்ந்த பிரணவு (20), தாம்பரம் பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் (21), முடிசூசர் அடுத்த எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ஆறுமுகம் (21) ஆகிய 3 பேர் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக சரண் அடைந்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சுங்குவார்சத்திரம் போலீசார் சரண் அடைந்த 3 பேரை காவலில் எடுத்து விசாரணை செய்ய முடிவு செய்து உள்ளனர்.


Next Story