நிதி நிறுவன உரிமையாளர் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் நிதி நிறுவன உரிமையாளர் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
வெட்டிக்கொலை
நாகர்கோவில் கோட்டார் வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் டேவிட் (வயது 26). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் வேலை செய்து வந்தார். நிதி நிறுவனத்தில் வேலை செய்வதால் கெட்ட பெயர் ஏற்படும் எனக்கூறி டேவிட்டை, அவருடைய தாயார் சாந்தி வேலைக்கு செல்ல வேண்டாம் என தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் டேவிட் அந்த நிதி நிறுவனத்துக்கு வேலைக்கு செல்வதை நிறுத்திக் கொண்டார்.
இதுதொடர்பாக நிதி நிறுவன உரிமையாளரான நாகர்கோவில் இசங்கன்விளையைச் சேர்ந்த ரமேஷ்சுக்கும் (38), டேவிட்டுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்தநிலையில் 15-1-2015 அன்று டேவிட் வைத்தியநாதபுரத்தில் உள்ள ஒரு கோவில் திருவிழாவுக்கு சென்றார். அப்போது அவரை ராஜன் என்ற பரமராஜன், ரமேஷ், இசங்கன்விளையைச் சேர்ந்த கண்ணன் (40), மேலபுத்தேரியைச் சேர்ந்த வில்சன் (37) மற்றும் 3 பேர் என மொத்தம் 7 பேர் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.
3 பேருக்கு ஆயுள் தண்டனை
இந்த கொலை சம்பவம் தொடர்பாக டேவிட்டின் தாயார் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் ராஜன் என்ற பரமராஜன், ரமேஷ் உள்ளிட்ட 7 பேரை கோட்டார் போலீசார் கைது செய்து நாகர்கோவிலில் உள்ள கூடுதல் விரைவு செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி ஜோசப் ஜாய் விசாரித்து வந்தார். வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரில் ஒருவரான கண்ணனும், புகார்தாரரான டேவிட்டின் தாயார் சாந்தியும் இறந்து விட்டனர்.
இதனால் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் மீதும் வழக்கு விசாரணை நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது நீதிபதி ஜோசப் ஜாய் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் ராஜன் என்ற பரமராஜன், ரமேஷ், வில்சன் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற 3 பேர் மீதும் குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு குற்றவியல் கூடுதல் வக்கீல் மதியழகன் ஆஜராகி வாதாடினார்.