வெவ்வேறு விபத்துகளில் ஜவுளி கடைக்காரர் உள்பட 3 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் ஜவுளி கடைக்காரர் உள்பட 3 பேர் பலி
x

மானூர் அருகே விபத்துக்குள்ளான கார்கள் நொறுங்கி கிடப்பதை படத்தில் காணலாம்.

தினத்தந்தி 9 Aug 2022 2:50 AM IST (Updated: 9 Aug 2022 2:56 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் நேற்று நடந்த வெவ்வேறு விபத்துகளில் ஜவுளி கடைக்காரர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

திருநெல்வேலி

மானூர்:

தென்காசி மாவட்டம் கீழநீலிதநல்லூர் அருகே உள்ள ஆயாள்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியசாமி (வயது 55). இவர் நேற்று தனது பேரனை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியின் விடுதியில் சேர்த்து விட்டு காரில் ஊருக்கு திரும்பினார். காரை அவரது மகன் மனோஜ் குமார் என்பவர் ஓட்டினார். நெல்லை- சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் மானூர் அருகே ராைமயன்பட்டி போலீஸ் காலனி பகுதியில் வந்தபோது, அவர்களது காரும், எதிரே வந்த மற்றொரு காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் கார்கள் அப்பளம் போல் நொறுங்கின. இந்த விபத்தில் காரில் இருந்த பாக்கியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது மகன் மனோஜ்குமார், மற்றொரு காரில் வந்த சிவகிரி அருகே உள்ள வடுகப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (51) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான பாக்கியசாமி உடலும் பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான பாக்கியசாமிக்கு பாப்பா என்ற மனைவியும், மனோஜ்குமார், தனசேகர் ஆகிய மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

பணகுடி காந்தி நடுத்தெருவை சேர்ந்தவர் சையது உசேன் (வயது 62) இவர் பணகுடியில் ரெடிமேடு ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இவர் நேற்று மதியம் வீட்டுக்கு தேவையான காய்கறிகள் வாங்கிக்கொண்டு மொபட்டில் திரும்பி வந்து கொண்டிருந்தார். பணகுடி மெயின் ரோடு பிள்ளையார் கோவில் அருகே வந்தபோது, எதிரே வந்த அரசு பஸ் மொபட் மீது ேமாதியது. இதில் சையது உசேன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பணகுடி போலீசார் அங்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் டிரைவர் நாகர்கோவில் அருகே உள்ள லீபுரத்தை சேர்ந்த குமார் (52) என்பவரை கைது செய்தனர்.

நாங்குநேரி மற்றும் மூன்றடைப்பு இடையே நான்கு வழிச்சாலையில் ஆயநேரி அருகே லாரி ஒன்று நேற்று மாலை வலது புறம் திரும்புவதற்கு நின்று கொண்டு இருந்தது. அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று லாரி மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த சங்கரன்கோவிலை சேர்ந்த அமர்நாத் என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த கார்த்திக் என்பவர் பலத்த காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story