மாமல்லபுரத்தில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 3 பேர் சாவு


மாமல்லபுரத்தில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 3 பேர் சாவு
x

மாமல்லபுரத்தில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, புலிக்குகை போன்ற புராதன சின்னங்களை கண்டுகளிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். நேற்று குடியரசு தின விடுமுறை என்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பயணிகள் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் பகுதியை சேர்ந்த 7 பேர் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் மாமல்லபுரம் பகுதியில் உள்ள முக்கிய புராதன சின்னங்களை கண்டு ரசித்து விட்டு இறுதியாக கடற்கரைக்கு சென்றனர்். அங்கு அவர்களில் 3 பேர் கடலில் குளித்தனர். அதில் 2 பேரை ராட்சத அலை நடுக்கடலுக்கு இழுத்துச் சென்றது. அவர்கள் இருவரும் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தனர்.

இறந்தவர்களில் ஒருவர் சோமங்கலம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த மோகன் (வயது 34) என்பதும், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார் என்பதும் தெரியவந்தது. மற்றொருவர் சென்னை திருநீர்மலை அடுத்துள்ள நாகல்கேனி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாலு (44) என்பதும், சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார் என்பதும் தெரியவந்தது. ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அவர்கள் இருவரின் உடல்களும் கரை ஒதுங்கியது.

பஸ் டிரைவர்

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டியை சேர்ந்தவர் சீனிவாசன் (36). இவர், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார்.

மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த இவர் கடலில் குளிக்கும்போது ராட்சத அலையில் அடித்துச்செல்லப்பட்டு பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பிரேத சோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story