ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை


ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கணவன்-மனைவி

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிப்பட்டணம் நாயுடு தெருவைச் சேர்ந்தவர் ரமணன் (வயது 48). விவசாயியான இவரது மனைவி கமலா.

இவர்களின் மகன் குமார் (21), மகள் நாகஜோதி (18). இவர் நெல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.

வயல் பகுதியில் உடல்கள்

நேற்று ஊருக்கு மேற்கே உள்ள வயல் பகுதியில் கமலா, நாகஜோதி ஆகியோர் பிணமாகவும், ரமணன் உயிருக்கு போராடியபடியும் கிடந்தனர். அந்த சமயத்தில் அங்கு வந்த ரமணனின் தம்பி கோபி இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உயிருக்கு போராடிய ரமணனை மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரமணனும் பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விரைந்தனர்

இதுகுறித்து உடனடியாக சிவகிரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு பிணமாக கிடந்த கமலா, நாகஜோதி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்கள்.

விஷ மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை

அப்போது, பல்வேறு தகவல்கள் வெளியானது.

அதாவது ரமணன் தேவிப்பட்டணத்திற்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் கோவில் அருகே விவசாயம் செய்து வந்தார். இதற்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதில் மனமுடைந்து காணப்பட்ட ரமணன் தனது மனைவி கமலா, மகள் நாகஜோதி ஆகியோரை அழைத்துக் கொண்டு நேற்று அதிகாலையில் வயலுக்கு சென்றார். அங்கு வைத்து தென்னை மரத்துக்கு வைக்கப்படும் விஷ மாத்திரையை 3 பேரும் சாப்பிட்டனர். இதில் கமலா, நாகஜோதி ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். ரமணன் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.

மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

சோகம்

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சிவகிரி அருகே ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story