நாட்டு துப்பாக்கிகளால் பறவைகளை வேட்டையாடிய 3 பேர் கைது


நாட்டு துப்பாக்கிகளால் பறவைகளை வேட்டையாடிய 3 பேர் கைது
x

நாட்டு துப்பாக்கிகளால் பறவைகளை வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

தா.பழூர்:

பறவைகள் வேட்டை

அரியலூர் மாவட்டம், தா.பழூரை அடுத்த தென்கச்சிபெருமாள்நத்தம் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள வெட்டாறு ஓடை அருகே சிலர் நாட்டு துப்பாக்கிகளை வைத்து பறவைகளை வேட்டையாடிக் கொண்டிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர்.

அப்போது அங்கு நாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்தி பறவைகளை வேட்டையாடிக் கொண்டிருந்த 3 பேரை போலீசார் பிடித்து, அவர்களை தா.பழூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள், மீன்சுருட்டி பகுதியை சேர்ந்த ஆரஞ்சு மகன் சந்திரன்(வயது 35), சுபாஷ் (47), பாபு (55) என்பது தெரியவந்தது.

உரிமம் இல்லாத துப்பாக்கிகள்

மேலும் அவர்கள் பயன்படுத்திய நாட்டு துப்பாக்கிகளின் உரிமம் ஏற்கனவே காலாவதியாகி விட்டதும், துப்பாக்கியை பயன்படுத்தியவர்கள் பெயரில் துப்பாக்கி உரிமம் இதுவரை பெறப்படாததும் தெரியவந்தது. இதையடுத்து உரிமம் இல்லாத துப்பாக்கிகளை வைத்து வேட்டையாடிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 2 ஒற்றை குழல் நாட்டு துப்பாக்கிகள் மற்றும் வேட்டையாடப்பட்ட 4 பறவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை ஜெயங்கொண்டம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story