அரசு வேலை வாங்கித்தருவதாககோடிக்கணக்கில் மோசடி
அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பெண் நிர்வாகி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரசு வேலை
சேலம் அம்மாபேட்டை வித்யா நகரை சேர்ந்தவர் காயத்ரி (வயது 42). விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி. இவர் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் பலர் புகார் கொடுத்தனர். அதே போன்று அழகாபுரம் போலீஸ் நிலையத்திலும் புகார் கூறப்பட்டு உள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த காயத்ரி தலைமறைவானார். இவரை கண்டு பிடித்து கைது செய்ய போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவின் பேரில், துணை உதவி கமிஷனர் வெங்கடேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்த காயத்ரியை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
3 பேர் கைது
இது குறித்து தனிப்படை போலீசார் கூறும் போது கைது செய்யப்பட்டு உள்ள காயத்ரி மீது பல்வேறு மோசடி புகார்கள் வந்தன. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருந்த காயத்ரி, புரோக்கர்களாக செயல்பட்ட ராஜசேகர் (33), அசோக்குமார் (39) ஆகிய 3 பேரை கைது செய்து உள்ளோம்.
விசாரணையில் அவர்கள் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டு உள்ளதாக தெரிகிறது.. இருப்பினும் விசாரணை முடிவில் தான் எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வரும் என்று கூறினர்.