3 அமைச்சர்கள் நேரில் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
கடலூர்
கூட்டுக்குடிநீர் திட்டம்
கடலூர் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்காக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று முன்தினம் நெய்வேலி வருகை தந்தார். தொடர்ந்து அவர் நேற்று அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோருடன் சென்று வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதலாவது, கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் வடலூர் நகராட்சிகள், பெண்ணாடம், மங்கலம்பேட்டை, குறிஞ்சிப்பாடி, கெங்கைகொண்டான் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் விருத்தாசலம், மங்களூர், நல்லூர் ஒன்றியங்களை சேர்ந்த 625 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் நபார்டு வங்கி மற்றும் குறைந்தபட்ச சேவை திட்டம் நிதி உதவியின் கீழ் ரூ.479 கோடி மதிப்பீட்டில் 4 சிப்பங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
சுத்திகரிக்கும் பணி
இந்த திட்டம் நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 2-வது சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீர் கீழ் வளையமாதேவி கிராமத்தில் அமைய உள்ள 31.26 மில்லியன் லிட்டர் கொள்ளளவுள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அதிநவீன தொழில்நுட்பம் மிகுந்த உபகரணம் மூலம் சுத்திகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து விருத்தாசலம் வட்டத்திற்குட்பட்ட புதுக்கூரைப்பேட்டையில் தரைமட்ட நீர் சேகரிப்பு தொட்டி கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் மற்றும் பெரியாக்குறிச்சி ஊராட்சியில் நீர்உந்து குழாய்கள் அமைக்கப்பட்டு வருவதையும் அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தாசில்தார் அந்தோணிராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், கோட்டேரி சுரேஷ், மாவட்ட பிரதிநிதி வெங்கடாஜலபதி, ஊராட்சி மன்ற தலைவர் சரண்யாபாபு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அடிக்கல் நாட்டினர்
தொடர்ந்து வடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தரைமட்ட நீர் சேகரிப்பு தொட்டி கட்டப்பட்டுள்ளதையும், அதன் அருகே கூட்டுக்குடிநீர் திட்டம் குறித்த விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்ததை பார்வையிட்டதோடு அப்பணிகளை துரிதமாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அமைச்சர் கே.என். நேரு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
வடலூர் நகராட்சிக்கு உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 85 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைக்க அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர். இதில் நகராட்சி நிர்வாக இயக்குனர் சசிகலா, வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார், ஆணையர் பானுமதி, நகர மன்ற துணை தலைவர் சுப்புராயலு, நகரச்செயலாளர் மற்றும் கவுன்சிலர் தமிழ்ச்செல்வன், என்ஜினீயர் சிவசங்கரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
புதிய பஸ்நிலையம்
தொடர்ந்து குறிஞ்சிப்பாடி பேருராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 82 லட்சத்தில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பேரூராட்சி இயக்குனர் கிரண்குராலா, திருச்சி மண்டல செயற்பொறியாளர் கருப்பையா, உதவி இயக்குனர் வெங்கடேசன், உதவி செயற்பொறியாளர் சண்முகம், மாவட்ட கல்விகுழு தலைவர் என்ஜினீயர் சிவகுமார், பேரூராட்சி தலைவர் கோகிலா குமார், செயல் அலுவலர் கிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், பேரூராட்சி துணை தலைவர் ராமர், கவுன்சிலர்கள் விடுதலை சேகர், அருள்முருகன், செந்தில்நாதன், நகர செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
அறிவு சார் மையம்
இதையடுத்து கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட வண்டிப்பாளையம் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் சுப்பிரமணியர்குளம் தூர்வாரி மேம்படுத்தப்பட்டுள்ள பணியையும், கரையேறவிட்டக்குப்பம் பகுதியில் மூலதன மானியத்திட்ட நிதியின் கீழ் ரூ.2½ கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் புதிய நவீன எரிவாயு தகன மேடை கட்டுமான பணிகளை பார்வையிட்ட அமைச்சர்கள் தொடர்ந்து மஞ்சக்குப்பம் மைதானத்தின் அருகில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பில் அறிவுசார் மையம் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டனர்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது எம்.எல்.ஏ.க்கள் சபா.ராஜேந்திரன், கோ.அய்யப்பன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குனர் தட்சணாமூர்த்தி, கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர்கள் உதயகுமார், பூங்கொடி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வேலூர் மண்டல தலைமை பொறியாளர் மனோகரன், மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் மகாதேவன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் பழனிவேல், நிர்வாக பொறியாளர் அண்ணாமலை மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.