3 தரைப்பாலங்கள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டன
பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 3 தரைப்பாலங்கள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டன. மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 3 தரைப்பாலங்கள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டன. மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தடுப்பணைகள் நிரம்பி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழையால் ஆத்தூர் பகுதியில் ஓடும் வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. ஆத்தூர் நரசிங்கபுரம், விநாயகபுரம், அணை மேடு பகுதிகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் அணை மேடு என்.வி.என்.நகர் பகுதியில் வசிக்கும் பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் கோட்டை தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டது. அங்கு புதிய பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே இருந்த தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டதால் துலுக்கனூர், கல்லாநத்தம், அம்மம்பாளையம், முல்லைவாடி, உப்பு ஓடை, வடக்குகாடு, சந்தனகிரி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் 18 ஆண்டுகளுக்கு பிறகு வசிஷ்ட நதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர்.
பருத்தி பயிர்கள்
தலைவாசல் வழியாக ஓடும் வசிஷ்ட நதி வீரகனூர் வழியே செல்லும் சுவேத நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வீரகனூர் பேரூராட்சி 2-வது வார்டு காமாட்சி அம்மன் கோவில் காலனி பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் புகுந்தது.
இதனால் சுமார் 100 ஏக்கர் பருத்தி பயிர்கள் சேதம் அடைந்தன. மேலும் முட்டல் நீர்வீழ்ச்சி, சிறுவாச்சூர் அருகே வடக்கு கல்ராயன் மலையில் உள்ள தேன்பாடி நீர்வீழ்ச்சி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
2 தரைப்பாலங்கள்
இதே போல சரபங்கா நதியிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் தேவூர் அருகே ஆத்துகாடு பகுதியில் உள்ள தரைப்பாலம், செட்டிபட்டி வயக்காடு தரைப்பாலம் ஆகியவை தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டன. மேலும்அம்மன் கோவில் பாலம், செட்டிபட்டி ஓங்காளியம்மன் கோவில் தரைப்பாலம், தைலாங்காடு தரை பாலம், உள்ளிட்ட 3 தரை பாலங்கள் தண்ணீரில் முழ்கின. இதன் காரணமாக சுற்றுவட்டார கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சரபங்கா நதியின் கரையோரம் உள்ள 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, பருத்தி, மஞ்சள், வாழை உள்பட பயிர்களை தண்ணீர் சூழ்ந்தது. ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கணேஷ் ராம், உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணி, பேரூராட்சி தலைவர் காவேரி உள்பட அதிகாரிகள் பார்வையிட்டனர்.
ஓமலூர்
ஓமலூரை அடுத்த பாகல்பட்டியில் சென்றாய பெருமாள் கோவில் தெப்பக்குளம் நிரம்பி வழிந்தது. இதனால் அங்குள்ள வீரமாத்தி அம்மன் கோவிலை தண்ணீர் சூழ்ந்தது. மேலும் அங்குள்ள ஜெய் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர்.
இந்த நிலையில் மகுடஞ்சாவடி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. மேலும் கவுண்டனேரி கஸ்பாபட்டி, ஏரி நம்பியாம்பட்டி, ஏரி ஆகிய ஏரிகளில் நீர் முழு கொள்ளளவு எட்டி நிரம்பின. தொடர் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மழை
மாவட்டத்தில் அதிகபட்சமாக பெத்தநாயக்கன்பாளையத்தில் 90 மி.மீ. பதிவானது. மற்ற இடங்களில் பதிவான மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ஏற்காடு-75.2, வீரகனூர்-74, கரியகோவில்-58, மேட்டூர்-48, ஆத்தூர்-46, ஆணைமடுவு-41, கெங்கவல்லி-35, எடப்பாடி-24, தம்மம்பட்டி-23, சங்ககிரி-20, ஓமலூர்-18.6, காடையாம்பட்டி-15.6, சேலம்-9.6.
2 பள்ளிகளுக்கு விடுமுறை
தேவூர் அருகே உள்ள செட்டிபாலம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் நேற்று 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதே போல மகுடஞ்சாவடி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் பொன்னியாற்று ஓடையில் வெள்ளம்பெருக்கெடுத்தது. இதனால் அருகில் இருந்த மகுடஞ்சாவடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்துக்கொண்டு பள்ளி வளாகத்துக்கு தண்ணீர் புகுந்தது. இதன்காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கல்வித் துறை அதிகாரிகள், வருவாய் துறையினர் பள்ளிக்கு வந்து பார்வையிட்ட நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.