வீடு கட்டுவதற்காக வங்கியில் இருந்து எடுத்து சென்ற ரூ.3 லட்சம் வழிப்பறி
விராலிமலையில் வீடு கட்டுவதற்காக வங்கியில் இருந்து எடுத்து சென்ற ரூ.3 லட்சத்தை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் வழிப்பறி செய்தனர்.
ரூ.3 லட்சம் வழிப்பறி
விராலிமலை அருகே உள்ள குறிச்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 38). இவர் விராலிமலை அருகே உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவர் விராலிமலை பகுதியில் உள்ள சக்தி நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்கு பணம் தேவைப்பட்டதால் நேற்று காலை விராலிமலை கடைவீதியில் உள்ள வங்கியில் ரூ.3 லட்சத்தை பெற்றுக்கொண்டு அதனை ஒரு பையில் எடுத்துகொண்டு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் கண் இமைக்கும் நேரத்தில் அவரது பணப்பையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத முருகேசன் செய்வதறியாது கூச்சலிட்டார்.
மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அந்த மோட்டார் சைக்கிளை நீண்ட தூரம் துரத்தி சென்றனர். ஆனால் மர்ம ஆசாமிகள் யாரிடமும் பிடிபடாமல் தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து முருகேசன் அளித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
விராலிமலையில், பட்டப்பகலில் ரூ.3 லட்சத்தை மர்ம ஆசாமிகள் வழிப்பறி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.