ஆவடியில் 3 நாட்கள் உணவுத் திருவிழா - பால்வளத்துறை அமைச்சர் நாசர் தகவல்


ஆவடியில் 3 நாட்கள் உணவுத் திருவிழா - பால்வளத்துறை அமைச்சர் நாசர் தகவல்
x

ஆவடியில் வரும் 10 முதல் 12-ம் தேதி வரை 3 நாட்கள் உணவுத் திருவிழா நடைபெற உள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்,


திருவள்ளூர் மாவட்டத்தின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஆவடியில் உணவுத் திருவிழா நடத்த திட்டமிடப்படுள்ளது. இது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியதாவது;-

"காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து, பிரிக்கப்பட்டு உருவான திருவள்ளூர் மாவட்டத்தின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், உணவு பாதுகாப்புத் துறை சார்பில், வரும் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை, ஆவடி கனரக வாகன தொழிற்சாலை மைதானத்தில் மாபெரும் உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.

இந்த உணவுத் திருவிழா, தமிழகம் மற்றும் இந்திய உணவு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை படைக்கும் வகையிலும், திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவு வகைகளை வழங்கும் நோக்கிலும் நடைபெற உள்ளது.

உள்ளூர் உணவகங்கள் முதல், நாடு மற்றும் உலக உணவகங்கள் வரை, சுமார் 150 உலகப் புகழ்பெற்ற உணவகங்களின் அரங்குகள் அமைய உள்ளன.

இந்த உணவுத் திருவிழாவில், ஆவின் பாலில் தயாரித்த பால்கோவா, உலகின் உயரமான ஃபலுடா ஐஸ்க்ரீம், 'உணவை வீணாக்காமல் பகிர்வோம்' திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பேருக்கு ஒரு வேளை உணவு வழங்குதல், 'உபயோகித்த எண்ணெயின் மறுபயன்பாடு' என்ற திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் கிலோ லிட்டர் பயன்படுத்திய எண்ணெயை சேகரித்து பயோ டீசல் தயாரிக்க வழங்குதல் ஆகிய செயல்பாடுகளில் புதிய உலக சாதனைகள் படைக்கப்பட உள்ளன.

மேலும், இத்திருவிழாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதமாக கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகளும் நடைபெற உள்ளன.

போட்டிகளில் வென்றவர்க ளுக்கு ஆச்சரியமூட்டும் பரிசுகளும் அறுசுவை அரசி, அரசன், இளவரசி மற்றும் இளவரசன் போன்ற பட்டங்களும் வழங்கப்பட உள்ளன. போட்டியில் கலந்து கொள்வதற்கு மட்டுமல்லாமல் பார்வையாளர்களையும் பரவசப்படுத்தும் விதத்தில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

மேலும், உணவுத் திருவிழாவின் இறுதிநாளில், சுதந்திர இந்தியாவின் 75-வது அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, 7.5 கி.மீ தூரத்துக்கு ஆவடியில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. விதவிதமான உணவு வகைகளை உண்டு ருசிக்க, பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்கும் நிகழ்வுகளைக் கண்டு ரசிக்க பொதுமக்கள் அனைவரும் உணவுத் திருவிழாவுக்கு வருகை தரவேண்டும். இத்திருவிழாவுக்கு அனுமதி இலவசம்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story