அமைச்சர் பிடிஆர் கார் மீது காலணி வீச்சு சம்பவம்; பாஜக மகளிரணியை சேர்ந்த 3 பெண்கள் அதிரடி கைது
காஷ்மீரில் வீரமரணமடைந்த லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்டது.
மதுரை,
காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை டி. புதுப்பட்டி லட்சுமணனின் பூத உடலுக்கு கடந்த 13-ம் தேதி அஞ்சலி செலுத்திவிட்டு வந்த தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணியை வீசிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மாவட்ட துணைத்தலைவர் உள்பட 7 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட குமார், பாலா, கோபிநாத், ஜெயகிருஷ்ணன், கோபிநாத், முகமது யாகூப், ஜெயவேல் ஆகிய 7 பேரும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அமைச்சர் பிடிஆர் கார் மீது காலணி வீசிய சம்பவத்தில் பாஜக மகளிர் அணியை சேர்ந்த 3 பெண்களை தனிப்படை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சரண்யா, தனலெட்சுமி, தெய்வானை ஆகிய 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
இதன் மூலம் அமைச்சர் கார் மீது காலணி வீசிய சம்பவத்தில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.