ஆசிரியர்களுக்கு 2-வது நாளாக எண்ணும் எழுத்தும் பயிற்சி
ஆசிரியர்களுக்கு 2-வது நாளாக எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.
பள்ளி கல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 4, 5-ம் வகுப்புகளுக்கு பாடங்கள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான 2-ம் பருவத்திற்கான எண்ணும்-எழுத்து பயிற்சி நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளாக நேற்றும் நடந்தது. அதன்படி பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு பெரம்பலூர் தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்கு பெரம்பலூர் ஸ்ரீ சாரதா பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஆலத்தூர் ஒன்றியத்துக்கு பாடாலூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும், வேப்பூர் ஒன்றியத்துக்கு வேப்பூர் வட்டார கல்வி அலுவலகத்திலும் எண்ணும்-எழுத்தும் பயிற்சி நடந்தது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஒருங்கிணைத்து பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும், பயிற்சியில் எடுத்து கொண்ட செயல்பாடுகளை பள்ளியில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆசிரியர்களுக்கு விரிவாக எடுத்து கூறினர்.