கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் 2வது நாளாக பறவைகள் கணக்கெடுக்கும் பணி - கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் 2வது நாளாக பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர், கல்லூரி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
நாகை,
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து 290 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இந்த ஆண்டு பறவைகள் சரணாலயத்திற்கு லட்சக்கணக்கான பறவைகள் வந்து குவிந்துள்ளது. ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஜனவரி மாதம் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
திருச்சி மண்டல தலைமை வனபாதுகாவலர் சுரேஷ், நாகை வனஉயிரின காப்பாளர் யோகேஸ்குமார்மீனா, உதவி வன அலுவலர் கிருபாகரன், கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் மற்றும் கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர் என 47 பேர் 12 குழுக்களாக பிரிந்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர் இணைந்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு போதுமான மழை பெய்ததால் இங்கு பறவைகளுக்கு ஏற்ற சூழல் நிலவுகிறது. கணக்கெடுப்பு முடிவில் இந்த ஆண்டுக்கான பறவைகள் வரத்து தொடர்பான முழு விவரங்கள் தெரிய வரும் வன அலுவலர் அயூப் கான் தெரிவித்தார்.