293 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சம் நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்
நெல்லையில் 293 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சம் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
நெல்லையில் 293 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சம் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதில் 33 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 280 மதிப்பிலான மின்மோட்டாருடன் கூடிய தையல் எந்திரம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் 150 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்தில் உதவித் தொகை, கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் மூலம் 110 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சத்தில் உதவித்தொகை என மொத்தம் 293 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
வெளிநாட்டு வேலை
பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியதாவது:-
கடந்த 2 ஆண்டுகளில் சிறுபான்மையினர் நலத்துறைக்கு தி.மு.க. அரசு பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்துள்ளது. அயலக பணிக்கு செல்வோர் எந்த பணிக்கு செல்கிறோம் என்பதை அறிந்து செல்வதோடு அரசிடம் பதிவு செய்து செல்ல வேண்டும். வெளிநாட்டு வேலைக்கு செல்வோருக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. வேலைக்கு செல்லும் நாட்டின் நிலை குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.
தென் மாவட்டங்களில் இருந்து தான் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கிறார்கள். போலி ஏஜெண்டுகள் ஆசை வார்த்தை காட்டி இங்கு உள்ளவர்களை வேலைக்கு அழைத்து செல்கின்றனர். மாவட்ட கலெக்டரிடம், வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் கட்டாயம் பதிவு செய்து செல்ல வேண்டும்.
சிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை மத்திய அரசு நிறுத்தினாலும், அவர்களுக்கு தொடர்ந்து கிடைத்திட மாநில அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள்
விழாவில் ஞானதிரவியம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், முஸ்லிம் மகளிர் உதவும் கரங்கள் சங்க செயலாளர் செய்யது அகமது, கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்க செயலாளர் பிரான்சிஸ் சேவியர், சிறுபான்மை நல அலுவலர் சம்பத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து களக்காடு வட்டாரத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சியினர் சேர்ந்து, களக்காடு பகுதியில் அரசியல் காழ்ப்புணர்ச்சி, வியாபார போட்டி காரணமாக ஒரு சில கடைகள் மட்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக நோட்டீஸ் வழங்கி உள்ளதை திரும்ப பெற வேண்டும். அங்கு சாதி, மத கலவரத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேட முயற்சி செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அமைச்சரிடம் மனு கொடுத்தனர்.