அரியலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு, ரெட் அலர்ட்டால் பாதிக்கப்படுவதாக 29 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன
அரியலூர் மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள ஆரஞ்சு, ரெட் அலர்ட்டால் பாதிக்கப்படுவதாக 29 பதற்றமான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இன்றும், நாளையும்...
வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அரியலூர் மாவட்டத்திற்கு இன்று (வியாழக்கிழமை) ஆரஞ்சு அலர்ட்டும், நாளை (வெள்ளிக்கிழமை) ரெட் அலர்ட்டும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனால் அரியலூர் மாவட்டத்தில் இன்று கனமழையும், நாளை அதிகனமழையும் பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 29 பதற்றமான பகுதிகளை கண்காணித்திட துணை ஆட்சியர் தலைமையில் பல்வேறு துறையினைச் சார்ந்த 12 அலுவலர்களை கொண்டு மண்டல கண்காணிப்புக்குழு 5 குழுக்களாக அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
39 நிவாரண மையங்கள் தயார்
பதற்றமான பகுதிகளில் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க ஏதுவாக 39 நிவாரண மையங்கள் அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பிற இடங்களில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் கூடுதலாக நிவாரண முகாம்கள் ஏற்படுத்திட வட்டாட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மீட்பு உபகரணங்களான ஜே.சி.பி., ஜெனரேட்டர், மரம் அறுக்கும் கருவி, நீர் உறிஞ்சு எந்திரங்களை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் போதுமான அளவில் வைத்திட நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
37,375 மணல் மூட்டைகள்
மேலும் 34 ஆயிரத்து 375 மணல் மூட்டைகள் மற்றும் 2 ஆயிரத்து 637 சவுக்கு குச்சிகள் பாதிப்புடையும் பகுதிகளுக்கு கொண்டு செல்ல ஏதுவாக வட்டார தலைமையிடங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்திடவும் மின் கம்பங்கள் அருகில் உள்ள பெரிய மரக்கிளைகளை உடன் அப்புறப்படுத்திடவும் மின்வாரிய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போதுமான அளவில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அவசர ஊர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு கனமழையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஒலி பெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
புகார்-தகவல் தெரிவிக்க தொடர்பு எண்கள்
மேலும், வடகிழக்கு பருவமழையின் போது பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கால கட்டுப்பாட்டு மையத்தை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், 04329 - 228709 என்ற தொலைபேசி எண்ணையும், 9384056231 என்ற வாட்ஸ் அப் எண்ணையும் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல் தெரிவிக்கலாம். இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.