ஈரோட்டில் 28-ந்தேதி காங்கிரஸ் பேரணி; கே.எஸ்.அழகிரி தொடங்கி வைக்கிறார்


ஈரோட்டில் 28-ந்தேதி காங்கிரஸ் பேரணி; கே.எஸ்.அழகிரி தொடங்கி வைக்கிறார்
x

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஈரோட்டில் 28-ந்தேதி காங்கிரஸ் பேரணி கே.எஸ்.அழகிரி தொடங்கி வைக்கிறார்.

சென்னை,

பெரியார் பங்கெடுத்து வெற்றி கண்ட வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை வருகிற 30-ந்தேதி தொடங்கி, ஓராண்டு முழுவதும் நடத்துவது என கேரள மாநில காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருக்கிறது. மார்ச் 30-ந்தேதி நடைபெறும் தொடக்க விழாவில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கெடுத்து சிறப்பிக்க உள்ளார்.

இதையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்து வைக்கம் போராட்டத்தில் பங்கெடுத்து கொண்ட பெரியார் பிறந்த ஈரோட்டில் கேரள மாநில காங்கிரஸ் சார்பாக வருகிற 28-ந்தேதி காலை 10 மணிக்கு நினைவு பேரணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பேரணியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைக்கிறார். முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. பேரணிக்கு தலைமை தாங்குகிறார்.

இந்த பேரணி வருகிற 29-ந்தேதி பாலக்காடு வழியாக அதே நாள் மாலை வைக்கம் சென்றடைகிறது. இந்த பேரணி செல்லும் இடங்களில் எல்லாம் உற்சாக வரவேற்பு அளிக்கவும், அனைத்து வசதிகளை செய்து கொடுக்கவும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் விழாக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஒருங்கிணைப்பாளராக மோகன் குமாரமங்கலமும், உறுப்பினர்களாக 43 பேரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேற்கண்ட தகவல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story