வாலிபர் உள்பட 2 பேரிடம் ஆன்லைனில் ரூ.28¼ லட்சம் மோசடி
புதுக்கோட்டையில் வாலிபர் உள்பட 2 பேரிடம் ஆன்லைனில் ரூ.28¼ லட்சம் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோசடி
புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் சிவக்குமார் (வயது 54). இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் செல்போன் எண்ணில் இருந்து போன் வந்துள்ளது. அந்த எண்ணில் இருந்து பேசியவர், தங்களுக்கு சொந்தமான காலியிடத்தில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவன உயர்கோபுரம் அமைத்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என பேசியுள்ளார். தொடர்ந்து அதே எண்ணில் இருந்து பல முறை பேசி, உயர்கோபுரம் அமைக்க வேண்டுமானால் அதற்கு செலுத்த வேண்டிய வரி, காப்பீடு உள்ளிட்ட செலவினங்களுக்காக 38 தவணைகளில் மொத்தம் ரூ.11 லட்சத்து 94 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் சிவக்குமாரை செலுத்த வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு பிறகு சிவக்குமார் அந்த எண்ணை தொடர்பு கொள்ளமுடியவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவக்குமார் புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.16½ லட்சம்
இதேபோல கந்தர்வகோட்டை ராஜகோபால நகரை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் ராஜேந்திரன் (34). இவரது செல்போன் வாட்ஸ்-அப் வழியே தொடர்பு கொண்ட நபர்கள், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானத்தை ஈட்ட முடியும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதைநம்பிய ராஜேந்திரன் ஆன்லைன் வழியாக ரூ.16 லட்சத்து 50 ஆயிரத்தை ெசலுத்தி உள்ளார். பணத்தை செலுத்திய பிறகு, அவருக்கு எந்த தொகையையும் திரும்ப கொடுக்க வில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜேந்திரன் இதுகுறித்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.