அங்கன்வாடி மையத்தில் கலவை சாதம் சாப்பிட்ட 28 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி


அங்கன்வாடி மையத்தில் கலவை சாதம் சாப்பிட்ட 28 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி
x

புதுக்கோட்டை அங்கன்வாடி மையத்தில் கலவை சாதம் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை நகராட்சி அலுவலக பின்புறம் தெற்கு சந்தைப்பேட்டையில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று அங்கன்வாடி மையத்திற்கு வந்த 30 குழந்தைகள் அங்கு வழங்கப்பட்ட கலவை சாதத்தை சாப்பிட்டுள்ளனர். உணவு சாப்பிட்ட பின் அனைவரும் வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் வீட்டிற்கு சென்ற குழந்தைகள் சிலருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இதனால் குழந்தைகளின் பெற்றோர் பதறிப் போய் குழந்தைகளை தூக்கிக்கொண்டு அங்கன்வாடி மையத்திற்கு திரண்டு வந்தனர்.

இதில் அங்குள்ள உணவில் பாசிப் பயிறு தரமற்ற நிலையில் இருந்ததும், வண்டு இருந்ததும் தெரியவந்தது. மேலும் சமைக்கப்பட்ட உணவிலும் வண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மதிய உணவு சாப்பிட்டதில் ஏற்பட்ட ஒவ்வாமையால் இந்த விபரீதம் ஏற்பட்டது தெரிந்தது.




இதையடுத்து குழந்தைகளை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 28 குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்ததும் உணவு பாதுகாப்பு துறை, நகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மதியம் தயாரிக்கப்பட்ட கலவை சாதத்தின் மாதிரி, குழந்தைகளின் பெற்றோரால் புகார் கூறப்பட்ட சாதத்தின் மாதிரி, பாசிப்பயிறு மாதிரி ஆகியவை சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர். குழந்தைகள் அனைவரும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Next Story