கூட்டுறவு வங்கியில் ஆன்லைன் மூலம் ரூ.2.61 கோடி மோசடி: நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் கைது


கூட்டுறவு வங்கியில் ஆன்லைன் மூலம் ரூ.2.61 கோடி மோசடி: நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் கைது
x

சென்னை கூட்டுறவு வங்கியில் ஆன்லைன் மூலமாக ரூ.2.61 கோடி மோசடி செய்த நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு தலைமை கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்திருந்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக ரூ.2 கோடியே 61 லட்சம் மோசடி செய்து திருடப்பட்டது.

இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து வங்கி பரிவர்த்தனைகள், மொபைல் அழைப்பு விவரங்கள் ஆகியவற்றை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது குற்றவாளிகள் டெல்லியில் இருப்பதை கண்டறிந்தனர்.

2 பேர் கைது

இதையடுத்து சைபர் கிரைம் போலீசாரின் தனிப்படை டெல்லிக்கு விரைந்தது. அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. இந்த வேட்டையின் இறுதியில் வங்கி ஆன்-லைன் கொள்ளையில் ஈடுபட்ட நைஜீரியா நாட்டை சேர்ந்த எக்கேன் காட்வின் (வயது 37), அகஸ்டின் (42) ஆகியோர் டெல்லியில் கடந்த 8-ந்தேதி கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் 2 பேரும் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 41 பரிவர்த்தனைகளில் 32 வங்கி கணக்குகளுக்கு பணப் பரிமாற்றம் நடந்துள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து தொடர்புடைய 15 வங்கிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, முதற்கட்டமாக ரூ.1 கோடியே 5 லட்சம் மீட்கப்பட்டு உள்ளது.

ஆன்-லைன் வழியாக பண மோசடியில் ஈடுபட்ட அந்த 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story