5 குழந்தைகள் உள்பட 26 பேருக்கு வைரஸ் காய்ச்சல்
திருச்சியில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் காய்ச்சல் காரணமாக 5 குழந்தைகள் உள்பட 26 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருச்சியில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் காய்ச்சல் காரணமாக 5 குழந்தைகள் உள்பட 26 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.
வேகமாக பரவும் காய்ச்சல்
தமிழகத்தில் எச்3 என்2 மற்றும் `இன்புளூயன்சா' பி வைரசால் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. உடல் வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்யும் இந்த வகை காய்ச்சல் சில நேரங்களில் வந்த சுவடே தெரியாமல் போய் விடுகிறது. பல நேரங்களில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரை பறிக்கிற அளவுக்கு கோர முகத்தையும் காட்டுகிறது.
இந்த காய்ச்சலை கண்டறிய தமிழக சுகாதாரத்துறை காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. மேலும் காய்ச்சலுக்கு தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதுடன், அரசு மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகளுடன் சிறப்பு வார்டுகளும் தயார் நிலையில் உள்ளன.
5 பேருக்கு கொரோனா தொற்று
இந்தநிலையில் திருச்சியில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. 5 குழந்தைகள் உள்பட 26 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் 5 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும் திருச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வக தொழில் நுட்பனராக பணியாற்றி வரும் 38 வயது பெண், கோவா சென்று திரும்பிய 42 வயது ஆண், வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு வாலிபர் உள்பட 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீட்டில் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அத்துடன் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தனி வார்டு
இதுபற்றி திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேரு கூறும் போது, 3 நாட்களுக்கு மேலாக காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகளுக்கு என்று தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் தொடர்பாக தீவிர சிகிச்சை பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளது, என்றார்.