காசிமேட்டில் ராட்சத கிரேன் உதவியுடன் 26 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு


காசிமேட்டில் ராட்சத கிரேன் உதவியுடன் 26 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
x

காசிமேட்டில் 26 விநாயகர் சிலைகள் ராட்சத கிரேன் உதவியுடன் கடலில் கரைக்கப்பட்டது.

சென்னை

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த மாதம் 31-ந் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை ஆர்.கே.நகர் நகர் பகுதியில் பாரத் முன்னணி சார்பில் தண்டையார்பேட்டை, கார்னேஷ் நகர், அஜீஸ் நகர், ஜெ.ஜெ. நகர், பாரதி நகர், கருமாரியம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டனர்.

பாரத் முன்னணி தலைவர் சிவாஜி தலைமையில் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே போலீசார் பாதுகாப்புடன் நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

முஸ்லிம் ராஸ்டியா மஞ்ச் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் முகம்மது புரோஸ்கான் கலந்து கொண்டு இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் 108 தேங்காய் மற்றும் பூசணிக்காய் உடைத்து வழிபாடு செய்தார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி, கொடி அசைத்து விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பின்னர் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக விநாயகர் சிலைகளை வாகனங்களில் கொண்டு வந்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் கடற்கரையில் கரைத்தனர்.

அதன்படி காசிமேடு மீன்பிடி துறைமுக கடற்கரையில் ராயபுரம், காசிமேடு, திரு.வி.க.நகர் பகுதியில் இருந்து சிவசேனா சார்பில் 11 விநாயகர் சிலைகளும், பாரத் முன்னணி சார்பில் 10 சிலைகளும், இந்து முன்னணி சார்பில் ஒரு சிலையும், 4 பொது சிலையும் என 26 சிலைகள் நேற்று ராட்சத கிரேன் மூலம் தூக்கி கடலில் கரைக்கப்பட்டன.

இதேபோல் திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம் பாப்புலர் எடைமேடை அருகே 8 விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டன. காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.


Next Story