சூப்பர் மார்க்கெட்டிற்கு பொருட்கள் வினியோகம் செய்ததில் ரூ.26¾ லட்சம் மோசடி
நாமக்கல்லில் சூப்பர் மார்க்கெட்டுக்கு பொருட்கள் வினியோகம் செய்ததில் ரூ.26¾ லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட வினியோகஸ்தர்கள் நலச்சங்கத்தினர் நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மேட்டுத்தெருவில் எங்களது சங்கம் இயங்கி வருகிறது. எங்களின் சங்க உறுப்பினர்கள் அனைவரும் நாமக்கல்லில் உள்ள மளிகை கடைகள், மருந்து கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பொருட்களை வினியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறோம். அந்த வகையில் நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு பொருட்களை வினியோகம் செய்தோம். கடந்த 2, 3 மாதங்களாக சூப்பர் மார்க்கெட் நி்ாவாகம், வினியோகஸ்தர்களுக்கு எந்த ஒரு தொகையும் செலுத்தவில்லை. அவர்களிடம் பணத்தை கேட்டால் எங்களை மிரட்டுகின்றனர். எனவே எங்கள் 36 பேருக்கும் வர வேண்டிய ரூ.26 லட்சத்து 77 ஆயிரத்து 544-ஐ பெற்று தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.