ரூ.2,500 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் தீவிரம்-அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு
ரூ.2,500 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
திறப்பு விழா
ராமநாதபுரம் யூனியன் புத்தேந்தல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் ரூ.22.65 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டிட திறப்பு விழா கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. நவாஸ்கனி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் (ராமநாதபுரம்) காதர்பாட்சா முத்துராமலிங்கம், (பரமக்குடி) முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜகண்ணப்பன் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
கூட்டுக்குடிநீர் திட்டம்
விழாவில் அமைச்சர் பேசியதாவது,
புத்தேந்தலில் ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதே போல மாவட்டத்தில் 13 ஊராட்சிகளில் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதுபோல சாலை பணிகள், கண்மாய் மராமத்து போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் தடுப்பணை கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று வரும் நிதியாண்டில் ரூ.5½ கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.2,500 கோடியில் தனித்திட்டமாக அறிவித்து திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்களின் தேவைக்கேற்ப திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். அதனை பொதுமக்கள் பெற்று பயன் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரபாகரன், துணைத்தலைவர் ராஜவேணி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி, ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், ஊராட்சி தலைவர் கோபிநாத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தாமரை செல்வி, சேவுக பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.