2,400 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
2,400 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
மயிலாடுதுறை பகுதியில் பெய்த தொடர் மழையால் 2,400 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. வெள்ளத்தில் நாற்றுகள் அடித்து வரப்பட்டது.
2,400 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றிய பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி மற்றும் நேரடி நெல் விதைப்பு மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து இருந்தனர். கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் 2,400 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகின. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாய பாதுகாப்பு சங்க தலைவர் திருக்கடையூர் ராமமூர்த்தி கூறுகையில், மேற்கண்ட பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் 10 நாட்களுக்கு முன்பு நடவு செய்த சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகின. யூரியா மற்றும் உரங்களை அரசு 100 சதவீதம் மானியத்துடன் வழங்கினால் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஓரளவு காப்பாற்ற முடியும் என்றார்.
சீர்காழி
சீர்காழி மற்றும் வைத்தீஸ்வரன்கோவில் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. சீர்காழி நகராட்சி சார்பில் சாலை மற்றும் குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி நடந்து வருகிறது. வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மழை நீர் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சீர்காழி அருகே உள்ள பகுதிகளில் நடவு செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின. வழுதலைக்குடி கிராமத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் மழை நீரில் மூழ்கிய விளை நிலத்திற்குள் இறங்கி சேதமடைந்த நெற்பயிர்களை கையில் ஏந்தி அரசு நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொள்ளிடம்
கொள்ளிடம் பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கொள்ளிடம் பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. கொள்ளிடம் கடைமடை பகுதியில் தண்ணீரின் வரத்து அதிகரித்து காணப்படுவதால் எடமணல், வடகால், கடவாசல், உமையாள்பதி, பச்சை பெருமாள் நல்லூர், ஆலங்காடு, வேட்டங்குடி, தாண்டவன் குளம், புதுப்பட்டினம், ஆரப்பள்ளம், புளியந்துறை, அளக்குடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கும் நிலையில் உள்ளது.
வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட நாற்றுகள்
பூம்புகார் மற்றும் திருவெண்காடு ஆகிய பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ள நீரில் வயல்களில் நடவு பணிக்காக வைக்கப்பட்டிருந்த நாற்றுகள் அடித்து செல்லப்பட்டன. மேலும் மணிக்கருணை, நாட்டுக்கன்னி மன்னி ஆறு, செல்லனாறு, வெள்ளப்பள்ளம் உப்பனாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் வெள்ள நீரில் வயல்களில் இருந்த நாற்றுகள் மிதந்து வந்தன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.