கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள 24 குழுக்கள் அமைப்பு
கரூர் மாநகராட்சி சார்பில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
24 குழுக்கள்
கரூரில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கரூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கரூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள்தோறும் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி சார்பில் 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மாநகராட்சி சார்பில் கொசுக்களை அழிக்க கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. கரூர் மாநகராட்சி ஜீவா நகர் பகுதியில் நடைபெற்று வந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தூய்மையாக வைத்திருக்க வேண்டும்
இந்த ஆய்வின் போது பொதுமக்கள் கொசு உருவாகாத வண்ணம் தண்ணீரை மூடிவைத்து சுத்தமாக பயன்படுத்த வேண்டும். காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என பொதுமக்களுக்கு ஆணையர் அறிவுறுத்தினார். மேலும் தங்கள் வீடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
மழைநீர் தேங்கக்கூடிய தேவையற்ற மற்றும் பயன்பாடற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். தங்கள் வீடு தேடி வரும் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது மாநகர நல அலுவலர் லட்சியவர்ணா, மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.