அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட 24 பேர் வேட்பு மனு
அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட 24 பேர் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் ஒரு கிராம ஊராட்சி தலைவர் பதவி, 9 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வருகிற 9-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒன்றிய அலுவலத்திலும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் கடந்த 20-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. அரியலூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட ரெட்டிப்பாளையம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட 5 பெண்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஜெயங்கொண்டம் ஒன்றிய கழுவந்தோண்டி ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பெண்களும், மேலணிக்குழி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஆண்டிமடம் ஒன்றிய இடையக்குறிச்சி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பெண்களும், சிலம்பூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒரு பெண் உள்பட 2 பேரும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தா.பழூர் ஒன்றிய சாத்தம்பாடி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 4 பெண்களும், தென்கச்சிப்பெருமாள் நத்தம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பெண்களும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். செந்துறை ஒன்றிய நாகல்குழி ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், துளார் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். திருமானூர் ஒன்றிய கீழக்காவாட்டாங்குறிச்சி ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒரு பெண் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். நாகல்குழி ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், கீழக்காவாட்டாங்குறிச்சி ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் தலா ஒருவர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால், அந்த பதவிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்படலாம். தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆய்வு செய்யப்படுகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கடைசி நாளாகும். வருகிற 9-ந் தேதி வாக்குப்பதிவும், 12-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.