5 மண்டலங்களில் 4-ந் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்
புரசைவாக்கத்தில் பிரதான உந்து குழாய் இணைப்பு பணிகள் நடைபெறுவதால் வருகிற 4-ந் தேதி சென்னையில் 5 மண்டலங்களில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
குழாய் இணைப்பு பணி
சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் பிரதான உந்து குழாய் இணைப்பு பணிகள், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்படுகிறது.
இதனால் வருகிற 4-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் 5-ந் தேதி காலை 10 மணி வரை தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை ஆகிய 5 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
குடிநீர் நிறுத்தம்
அதன்படி தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள பெரம்பூர், எருக்கஞ்சேரி, பழைய வண்ணாரப்பேட்டை, ராயபுரம் மண்டலத்தில் உள்ள ஜார்ஜ் டவுன், ஏழுகிணறு சாலை, முத்தியால்பேட்டை, வால்டாக்ஸ் சாலை, எழும்பூர், பூங்கா நகர், தம்புசெட்டி தெரு, கெங்குரெட்டி சாலை, சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.
இதேபோல் திரு.வி.க.நகர் மண்டலத்தில் உள்ள புளியந்தோப்பு, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள ஈ.வி.ஆர்.சாலை, பிரான்சன் கார்டன், கெல்லீஸ், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், தேனாம்பேட்டை மண்டத்தில் உள்ள திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஜஸ் ஹவுஸ், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் குடிநீர் நிறுத்தப்படுகிறது.
லாரிகளில் வினியோகம்
பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு குடிநீர் வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.