சின்னசேலத்துக்கு 2,370 மெட்ரிக் டன் யூரியா வரத்து
சென்னையில் இருந்து சரக்கு ரெயில் மூலம் சின்னசேலம் ரெயில் நிலையத்துக்கு 2 ஆயிரத்து 370 மெட்ரிக் டன் யூரியா உர மூட்டைகள் வந்திறங்கியது.
சின்னசேலம்
சென்னையில் இருந்து
சின்னசேலம் ரெயில் நிலையத்தில் சரக்கு இறங்கு தளம் உள்ளதால் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் இருந்து உர மூட்டைகள் விவசாய பயன்பாட்டுக்காக வந்து இறங்குகிறது. அதன்படி நடப்பு பருவ சாகுபடிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளின் பயன்பாட்டுக்காக சென்னையில் உள்ள உர உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து 21 பெட்டிகளில் தழைச்சத்துள்ள 2 ஆயிரத்து 370 மெட்ரிக் டன் யூரியா உர மூட்டைகள் ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் சின்னசேலம் ரெயில் நிலையத்துக்கு நேற்று வந்தது.
இந்த உர மூட்டைகளை வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) அன்பழகன், மண்டல மேலாளர் குமரேசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் உர மூட்டைகளை லாரிகளில் ஏற்றி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
அளவோடு பயன்படுத்த வேண்டும்
இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, கரும்பு, மக்காச்சோளம், மரவள்ளி, நெல் ஆகிய பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் ரசாயன உரங்களை அதிக அளவில் பயன்படுத்துவதை தவிர்த்து அளவோடு பயன்படுத்த வேண்டும். மேலும் மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்கு என ஆயிரத்து 225.8 மெட்ரிக் டன் யூரியா, டி.ஏ.பி. ஆயிரத்து 991 மெட்ரிக் டன், பொட்டாஸ் ஆயிரத்து 764 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 9 ஆயிரத்து 62 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 987 மெட்ரிக் டன் தற்போது இருப்பு உள்ளது. எனவே, விவசாயிகள் ஆதார் அட்டைகளை கொண்டு தேவையான உரங்களை பெற்று பயனடையலாம் என்றனர்.