சென்னை மண்டலத்தில் 235 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - சுங்கத்துறை கமிஷனர் தகவல்
சென்னை சுங்கத்துறை கடந்த ஆண்டு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடிக்கு வருவாய் ஈட்டியது என்று சுங்கத்துறை கமிஷனர் கூறினார்.
சென்னை,
சர்வதேச சுங்க தினம் சென்னை, ராஜாஜி சாலையில் உள்ள சுங்கம் பவனில் நேற்று நடந்தது. இதில், மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை தலைவர் மற்றும் மத்திய சுங்கத்துறை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதன்மை தலைமை கமிஷனர் ஆஷிஷ் வர்மா தலைமை தாங்கி பேசும்போது, 'சுங்க அதிகாரிகள், கடமைகள் மற்றும் வரிகளை திறம்பட வசூலிப்பதன் மூலம் நாட்டின் நிதி நலன்களைப் பாதுகாக்கின்றனர். எல்லையில் மோசடி மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுப்பதில் முன்னணியில் உள்ளனர். இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சட்டவிரோத மற்றும் ஆபத்தான பொருட்களுக்கு எதிராக குடிமக்களை பாதுகாக்கும் முக்கிய எல்லை மேலாண்மை நிறுவனங்களில் சுங்க துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது' என்றார்.
விழாவில் சென்னை மண்டல சுங்கத்துறை தலைமை கமிஷனர் டாக்டர் ராம் நிவாஸ் பேசும்போது, 'நாட்டின் எல்லையோர பகுதியில் சுங்கத்துறையின் பணி முக்கியமானது. சட்டவிரோதமாக பொருட்களை கடத்தல், அபாயகரமான பொருட்களை கொண்டு வருதல் ஆகியவற்றை கண்காணித்து தடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது சுங்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரும் தங்கம் வெளிநாட்டு கரன்சிகள் அரியவகை விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட கடத்தல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் சென்னை மண்டலத்தில் 235 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை சுங்கத்துறை கடந்த ஆண்டு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடிக்கு வருவாய் ஈட்டப்பட்டது. நடப்பாண்டு, ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடி இலக்கை எட்டிவிடுவோம்' என்றார்.