ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் கைது: சிங்களக் கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது - ராமதாஸ்


ராமேஸ்வரம் மீனவர்கள்  22 பேர் கைது: சிங்களக் கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது - ராமதாஸ்
x

வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 22 பேரை அவர்களின் இரு படகுகளுடன் சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 22 பேரை அவர்களின் இரு படகுகளுடன் சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் மயிலாட்டி மீன்பிடி துறைமுகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கச்சத்தீவை ஒட்டிய இந்திய பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்களக் கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 64 பேர் கடந்த மாதத்தில் இரு கட்டங்களாக கைது செய்யப்பட்டனர். முதலில் கைது செய்யப்பட்ட 27 பேரில் 26 பேர் இரு கட்டங்களாக விடுதலை செய்யப்பட்ட நிலையில், ஒரு மீனவர் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டவர் என்று கூறி அவருக்கு மட்டும் இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

அதனால், இராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் விலகும் முன்பே மேலும் 22 மீனவர்கள் சிங்களப் படையால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தமிழக மீனவர்களை பழிவாங்க வேண்டும் ; மீண்டும், மீண்டும் கைது செய்வதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை முடக்க வேண்டும் என்பது தான் இலங்கை அரசின் நோக்கம் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அதற்காகவே ஒருபுறம் மீனவர்களை கைது செய்து, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்தல், இன்னொருபுறம் தமிழக மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்களைக் கொண்டு தாக்குதல் நடத்துதல் என இருமுனைத் தாக்குதலை இலங்கை நடத்தி வருகிறது.

இதனால், தமிழக மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். இதை புரிந்து கொண்டு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழ்நாடு, புதுவை மீனவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது.

தில்லியில் உள்ள இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை அழைத்து தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலையும், கைது நடவடிக்கைகளையும் கைவிடும்படி மத்திய அரசு எச்சரிக்க வேண்டும். இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்யவும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து படகுகளையும் விடுவிப்பதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story