விஷ சாராய உயிரிழப்பு விவகாரம்:விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்களில் 219 பேர் அதிரடி கைது


விஷ சாராய உயிரிழப்பு விவகாரம்:விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்களில் 219 பேர் அதிரடி கைது
x
தினத்தந்தி 18 May 2023 12:15 AM IST (Updated: 18 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விஷ சாராய உயிரிழப்பு விவகாரத்தையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் 219 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்தவர்களில் 14 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். பாதிக்கப்பட்ட 62 பேர், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மரக்காணம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட வெவ்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் அதிரடி சோதனை நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் முடுக்கி விடப்பட்டு சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் அதிரடியாக இறங்கியுள்ளனர்.

219 பேர் அதிரடி கைது

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் டி.ஐ.ஜி. (பொறுப்பு) பகலவன் மேற்பார்வையில் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 4 நாட்களாக நடந்த இந்த மதுவிலக்கு சோதனையின்போது சாராயம், மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக 216 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். இதில் 219 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 1,166 லிட்டர் சாராயம் மற்றும் 1,892 மதுபாட்டில்கள், 236 லிட்டர் கள், 5 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து, இந்த அதிரடி நடவடிக்கை மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது.


Next Story