92 பணியிடங்களுக்கு 2,162 பேர் போட்டி: குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு
குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக முதன்மை தேர்வு ஆகஸ்டு மாதம் நடக்க உள்ளது. மொத்தம் 92 பணியிடங்களுக்கு 2,162 பேர் போட்டியிடுகின்றனர்.
சென்னை,
குரூப்-1 பதவிகளில் வரும் 18 துணை கலெக்டர்கள், 26 போலீஸ் துணை சூப்பிரண்டுகள், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள், 25 வணிக வரி உதவி ஆணையர்கள், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் என மொத்தம் 92 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது.
முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் இந்த பதவிகளுக்கான தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் முதல்நிலை தேர்வுக்கு 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தகுதியுடையவர்களாக கருதப்பட்டு, அவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. ஹால்டிக்கெட்டை வழங்கியது. இவர்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 1,080 தேர்வு மையங்களில் கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் 19-ந் தேதி நடத்தப்பட்டது.
முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு
மொத்தம் 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்த நிலையில், அவர்களில் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 957 பேர் மட்டுமே தேர்வை எதிர்கொண்டனர். ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 457 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இந்த நிலையில் இவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று முதலில் சொல்லப்பட்டது. அதன் பிறகு, மார்ச் மாதத்துக்கு தள்ளிப்போடப்பட்டது. அந்த மாதத்திலாவது தேர்வு முடிவு வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த தேர்வர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனைத்தொடர்ந்து ஏப்ரல் மாத இறுதிக்குள் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது.
அதன்படி, 92 பணியிடங்களுக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 957 பேர் எழுதிய குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவை டி.என்.பி.எஸ்.சி. நேற்று இரவு வெளியிட்டது. தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையத்தளத்தில் தங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளமுடியும் என்றும், தேர்வர்களுக்கு அவர்கள் பதிவு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்போன் எண்ணுக்கும் தெரிவிக்கப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்து இருக்கிறது.
2,162 பேர் தேர்ச்சி
ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 957 பேர் எழுதியதில், ஒரு பணியிடத்துக்கு 20 பேர் வீதம் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, அந்த பட்டியலில் 2 ஆயிரத்து 162 பேர் இடம் பெற்று இருக்கின்றனர்.
முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள், அடுத்தகட்டமாக முதன்மை தேர்வை எதிர்கொள்ள வேண்டும். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்கள் வாயிலாக குறிப்பிட்ட ஆவணங்களை அடுத்த மாதம் (மே) 8-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் 92 பணியிடங்களுக்கு 2 ஆயிரத்து 162 பேர் போட்டியிட உள்ளனர்.
முதன்மை தேர்வை பொறுத்தவரையில், வருகிற ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்கள், அதற்கடுத்தபடியாக நேர்முக தேர்வில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள். அதில் தகுதி பெறும் தேர்வர்களுக்கு தகுந்த பணியிடங்கள் வழங்கப்பட உள்ளன.