புதுக்கோட்டையில் காரில் கடத்தி வரப்பட்ட 212 கிலோ கஞ்சா பறிமுதல்


புதுக்கோட்டையில் காரில் கடத்தி வரப்பட்ட 212 கிலோ கஞ்சா பறிமுதல்
x

புதுக்கோட்டையில் காரில் கடத்தி வரப்பட்ட 212 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை

212 கிலோ கஞ்சா பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவணம் கைகாட்டி அருகே காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி வந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் காரில் வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து, அந்த காரை போலீசார் சோதனையிட்ட போது அதில் பண்டல், பண்டலாக கஞ்சா இருந்துள்ளது. பின்னர் அந்த கஞ்சாவை எடையிட்டு பார்த்த போது மொத்தம் 212 கிலோ இருந்துள்ளது. கஞ்சாவையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூரில் இருந்து கடத்தல்

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தஞ்சாவூரில் இருந்து காரில் கஞ்சாவை கடத்தி வந்திருக்கலாம் என தெரியவந்தது. மேலும் அதனை புதுக்கோட்டையில் உள்ள வியாபாரியிடம் விற்பனைக்காக கொண்டு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் 20 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றி 2 பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் கும்பல் அதிகமாக இருப்பதாகவும், இங்கிருந்து பிற பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படுவதாக கிடைக்கும் தகவலின் அடிப்படையில் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

போலீசார் விசாரணை

இந்த நிலையில் 212 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது யார்?, அதனை எங்கிருந்து கடத்தி வந்தனர்?, புதுக்கோட்டையில் யாரிடம் அதனை ஒப்படைக்க எடுத்து வந்தனர்? புதுக்கோட்டையில் உள்ள அந்த கஞ்சா வியாபார கும்பல் தலைவன் யார்? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story