வாகன சோதனையில் பஸ்சில் கடத்தி வந்த 21 கிலோ கஞ்சா சிக்கியது - 2 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 21 கிலோ எடை கொண்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் நேற்று ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னை நோக்கி வந்த தமிழக அரசு பஸ்சை அவர்கள் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மொத்தம் 4 பண்டல்களில் 21 கிலோ எடை கொண்ட கஞ்சா சிக்கியது.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சில் கஞ்சா கடத்த முயன்றதாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த மாசாணம் (வயது 35), பழனியை சேர்ந்த பரத்குமார் (28) ஆகிய 2 பேரை கைது செய்தனர். கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக திருவள்ளூர் அடுத்த மேலகொண்டையார் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த வாசுதேவன் என்பவரின் மகன் பிரதீப் (24) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.