20-ந்தேதி கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்; கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு
கவர்னர் உரை என்பது மாநில அரசின் கொள்கை குறிப்பே தவிர கவர்னரின் தனிப்பட்ட கருத்துக்களின் தொகுப்பு அல்ல என்று கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கவர்னர் உரை என்பது மாநில அரசின் கொள்கை குறிப்பே தவிர கவர்னரின் தனிப்பட்ட கருத்துக்களின் தொகுப்பு அல்ல. தமிழ்நாடு கவர்னர் அமைச்சரவை தயாரித்து ஒப்புதல் அளித்த அறிக்கையில், சிலவற்றை தவிர்த்தும், திரித்தும் வாசித்திருப்பது அரசியலமைப்பு சட்டப்படியும், தார்மீக நெறியின் படியும் ஏற்றுக்கொள்ளமுடியாத நடவடிக்கையாகும். தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதே தனது கொள்கையாக கொண்டுள்ள கவர்னர் ஆர்.என்.ரவி உடனடியாக தமிழகத்தை விட்டு வெளியேறவேண்டும்.
சட்டப்பேரவையை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட கவர்னர் ஆர்.என்.ரவியை வன்மையாக கண்டிப்பதோடு, அவர் தமிழ்நாட்டில் இருந்து வெளியேறவேண்டும் என்றும், மத்திய அரசு அவரை நீக்கம் செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிற 20-ந்தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.