205 வழக்குகள், அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு மாற்றம்
205 வழக்குகள், அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது.
அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் நீதிபதி டாக்டர் ராமராஜ் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை (தெற்கு) மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 2017-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் இருந்து வந்த 205 வழக்குகள் விசாரணையை விரைந்து நடத்தி தீர்ப்பு வழங்குவதற்காக அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்குகளுக்கு புதிய வழக்கு எண்களை வழங்கி, மாற்றம் செய்யப்பட்ட வழக்குகளுக்கு விசாரணை தேதியை அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை ஆணையத்தில் உள்ள நாட்குறிப்பேட்டில் தெரிந்து கொள்ளலாம். அல்லது நுகர்வோர் ஆணையங்களுக்கான இணையதளத்தின் மூலம் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். இந்த வழக்குகளை நடத்துவதற்கு புகார்தாரர்களும், எதிர்தரப்பினரும், வழக்கறிஞர்களும் ஒத்துழைக்க வேண்டும். மேலும் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் விரைவில் சமரச மையம் தொடங்கப்பட உள்ளது. மத்தியஸ்தர் பணிக்கான நேர்காணல் முடிவடைந்து விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. நுகர்வோர் வழக்குகளை சமரச மையத்தின் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.