பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை விரிவாக்கம் செய்ய ஆய்வு- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்


பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை விரிவாக்கம் செய்ய ஆய்வு- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
x
தினத்தந்தி 7 May 2022 10:19 PM IST (Updated: 7 May 2022 10:19 PM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை விரிவாக்கம் செய்ய ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

விரிவான மண்டல திட்டம்

சட்டசபையில் திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை சம்மந்தமான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:-

திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை, ஐ.நா. வளர்ச்சித் திட்டத்துடன் இணைந்து நீடித்த வளர்ச்சி இலக்குகள் ஒருங்கிணைப்பு மையத்தை மாநிலத்தில் அமைக்கும்.

சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் வருடாந்திர செயல் திட்டத்தினை, போபாலில் உள்ள திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலைப் பள்ளியுடன் இணைந்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் கீழ் நகர் ஊரமைப்பு இயக்ககத்தால் தயாரிக்கப்படும் விரிவான மண்டலத் திட்டத்தின் அடிப்படையில் மாற்றியமைக்கப்படும்.

ரூ.30 கோடியில் மேம்பாட்டு பணிகள்

சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-1 நீட்டிப்பு வழித்தடத்தில் உள்ள மெட்ரோ நிலையங்களில் பன்முகப் போக்குவரத்து ஒருங்கிணைப்பு மேம்பாடு, அணுகும் வசதிகளை அதிகரித்தல் மற்றும் ஒட்டுமொத்த தோற்றத்தை மேம்படுத்துதல் போன்ற மேம்பாட்டுப் பணிகளை ரூ.30 கோடி செலவில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொள்ளும்.

திருமழிசையில் உத்தேசிக்கப்பட்டுள்ள துணை நகரியம் மற்றும் நகரங்களுக்கு இடையேயான பஸ் முனையம் மற்றும் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பெருகிவரும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2-ன் வழித்தடம்-4-ஐ பூந்தமல்லி புறவழிச் சாலையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை நீட்டிப்பதற்கான ஒரு விரிவான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும்.

திருமங்கலம் - ஆவடி

மக்கள்தொகை அதிகமாக உள்ள சென்னை பெருநகர் பகுதியின் வடமேற்குப் பகுதியில், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2-ன் வழித்தடம் 5-ஐ திருமங்கலத்தில் இருந்து முகப்பேர் மற்றும் அம்பத்தூர் வழியாக ஆவடி வரை நீட்டிப்பதற்கான ஒரு விரிவான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும்.

உருவாகிவரும் குடியிருப்பு மற்றும் வணிக ரீதியான மேம்பாடு ஆகியவற்றால் ஏற்படும் போக்குவரத்து தேவையை மதிப்பீடு செய்து மெட்ரோ ரெயில் இணைப்பினை ஏற்படுத்துவதற்காக, சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2-ன் வழித்தடம்-3-ஐ சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம் வரை நீட்டிப்பதற்கான ஒரு விரிவான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும்.

கேளம்பாக்கம் - கிளாம்பாக்கம்

இந்தப் பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் மேம்பாடுகளினால் ஏற்படும் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஜி.எஸ்.டி. சாலை மற்றும் ராஜீவ்காந்தி சாலைக்கு இடையே இணைப்பினை ஏற்படுத்துவதற்காக, சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2-ன் வழித்தடம் 3-ஐ மேலும் கேளம்பாக்கத்தில் இருந்து மாம்பாக்கம் மற்றும் வண்டலூர் வழியாக கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரை நீட்டிப்பதற்காக தனியாக ஒரு சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும்.

சென்னை நகரில் உள்ள நகர போக்குவரத்து அமைப்புகளின் நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைந்த இயக்கம் ஆகியவை எதிர்காலத்தில் பலனளிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, ரெயில் பெட்டிகளை தரம் உயர்த்துதல் உள்ளிட்ட பயணிகள் வசதிகளை மேம்படுத்துவதற்காக பெருந்திரள் துரிதப் போக்குவரத்து அமைப்பின் இயக்கம் மற்றும் பராமரிப்பை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் எடுத்துக்கொள்வதற்கான கருத்துருவின் மீது மத்திய அரசின் ஒப்புதல் பெறுவதற்கு இந்த அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும்.

புறநகர் ரெயிலில் குளிர்சாதன பெட்டி

புறநகர் ரெயில் பயணிகளுக்கு வசதியை ஏற்படுத்துவதற்கும், பயணத்தை எளிதாக்குவதற்கும் தெற்கு ரெயில்வேயுடன் கூட்டு சேர்ந்து, குறிப்பாக சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டுக்கு இடையே இயக்கப்பட்டு வரும் புறநகர் ரெயில்களில் குளிர்சாதன ரெயில் பெட்டிகள் மற்றும் பயணிகள் விரும்பும் வசதிகளைக் கொண்ட ரெயில் பெட்டி அறைகள் அறிமுகம் செய்வது குறித்து விரிவான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story