பெரியார் திடலுக்கு நான் வந்திருப்பது புதிதல்ல; பெரியார் திடல் எனது தாய் வீடு - மு.க.ஸ்டாலின் உரை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 April 2022 10:36 PM IST (Updated: 25 April 2022 10:36 PM IST)
t-max-icont-min-icon

கருப்பையும், சிவப்பையும் ஒருபோதும் பிரிக்க முடியாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

சென்னை, பெரியார் திடலில் திக மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், “நம்முடைய ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, பெரியார் திடலுக்கு நான் வந்திருப்பது புதிதல்ல, என் தாய் வீட்டுக்கு வந்திருக்கிறேன். அதிலும் நம்முடைய பாசமிகு ஆசிரியர் அவர்களைப் பாராட்ட வந்திருக்கிறேன். அவரைப் பாராட்டுவது என்பது ஒரு இயக்கத்தின் தலைவரை - ஒரு கருத்தியலின் தலைவரை பாராட்டுவதாகும்! திராவிடக் கொள்கையின் வழிகாட்டியாக, கலங்கரை விளக்கமாகவே அவரை நான் பார்க்கிறேன். திராவிடக் கருத்தியலின் உயிர் வடிவமாகத்தான் பார்க்கிறேன். 

இந்த 'திராவிட மாடல்' ஆட்சியானது, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல - இந்தியாவுக்கே முன்மாதிரியான ஆட்சியாக அமைந்திருக்கிறது. நம்முடைய சமூகநீதியை - நாம் பேசிய மாநில சுயாட்சியை, இன்றைக்கு வட மாநிலத் தலைவர்கள், பல முதலமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் விழிப்படைந்து வரும் வடமாநில பொதுமக்களும் முழங்கத் தொடங்கியிருக்கிறார்கள். 

இதுதான் நமது நமக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய சாதனை! திராவிடச் சிந்தனை இன்று இந்தியா முழுவதும் பரவுவது சிலருக்கு கசப்பாக இருக்கிறது. 'திராவிட மாடல்' என்று சொல்வது சிலருக்கு எரிச்சலைத் தருகிறது. பெரியார் பெயரை அடிக்கடி சொல்வதைப் பார்த்து அவர்களுக்கு கோபம் வருகிறது. வெறுப்பைச் சுமந்து வாழ்பவர்களுக்கு, திராவிடர் கழகமும் - திராவிட முன்னேற்றக் கழகமும் ஒட்டி இருப்பது சிலருக்கு எரிச்சலாக இருக்கிறது. 

கருப்பையும் சிவப்பையும் யாராலும் - எந்தக் கொம்பனாலும் பிரிக்க முடியாது! திராவிடர் கழகக் கொடியிலும் - திராவிட முன்னேற்றக் கழகக் கொடியிலும் - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகக் கொடியிலும் - இருப்பது கருப்பும் சிவப்பும்தான். எங்களை ஒன்றாக இருக்கிறார்கள் என்று சொல்லக் கூடாது - ஒன்று கலந்துவிட்டவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய மூவரையும் ஏற்றுக் கொண்டவர்கள் நாம். தனித்தனி இயக்கமாக இருந்தாலும், நாம் அனைவரும் ஒரே இயக்கத்தை - ஒரே கொள்கையைச் சேர்ந்தவர்கள்தான். அதை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது.

தமிழினத்தை கல்வியில், வேலை வாய்ப்பில், தொழில் முன்னேற்றத்தில், சமூக மேம்பாட்டில் வளர்த்தெடுப்பது ஒன்றையே இலக்காகக் கொண்டு நாம் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். தமிழினம் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் நம்மை எதிர்க்கிறார்கள். இது, பல்லாயிரம் ஆண்டு காலப் பகைமையாக இருந்தாலும் -எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் சமத்துவத்தை அடையும் வரை நமது கொள்கையில் வெல்லும் வரை நாம் உறுதியாக இருப்போம்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, நீதிக்கட்சியின் ஆட்சி போட்ட விதைதான் சமூகநீதியின் விதை!.. கல்வி நுழைவு உரிமை!.. தீண்டாமை விலக்கு!.. பெண்ணுக்கான உரிமைகள்!.. இவற்றின் மூலமாகத்தான் இந்த தமிழ்நாடும், தமிழினமும் தலைநிமிர்ந்து நிற்கிறது. நீதிக்கட்சி விதை போட்டது. பெருந்தலைவர் காமராசர் அவர்கள் அதை வளர்தெடுத்தார்கள். பேரறிஞர் அண்ணாவும் - முத்தமிழறிஞர் கலைஞரும் அதனைச் செழிக்க வைத்தார்கள். தமிழினம் உயர்வைப் பெற்றது. 

நாம் கேட்பது, இந்த சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வையுங்கள், ஆசிரியர் சொன்னதுபோல, 'போஸ்ட்மேன் வேலை செய்ய வேண்டும்' என்பதுதான். முன்வடிவை அனுப்பி வைக்கும் அஞ்சல் துறைப் பணியைக் கூட ஆளுநர் செய்ய மறுப்பது என்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

எட்டுக்கோடி மக்களின் பிரதிநிதிகள் அனைவரும் சேர்ந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை, ஒரு நியமன ஆளுநர் என்ற ஒற்றை மனிதர் திருப்பி அனுப்புகிறார். நாம் மீண்டும் அனுப்பியதையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப தொடர்ந்து மறுக்கிறார் என்றால், இந்த நாட்டில் மக்களாட்சி நடக்கிறது என்று சொல்ல முடியுமா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாம் மக்களுக்கு நன்மை செய்யும் திட்டங்களைத் தீட்டினால் - நியமனப் பதவியில் இருப்பவர்கள் அதைத் தடுப்பதா? மக்களை விட ஆளுநர்கள் அதிகாரம் பொருந்தியவர்கள் என்று நினைக்கிறார்களா? அப்படி ஒரு எண்ணம் அவர்கள் மனதில் இருந்தால் அதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

'எனது இலட்சியங்கள் வெற்றி பெறுவதற்குக் காலதாமதம் ஆகலாம். ஆனால் இறுதி வெற்றி எனக்குத்தான்' என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள். இத்தனை ஆண்டுகாலமாக அந்தப் பழமைவாதத்தை எதிர்த்து நாம் பல வெற்றிகளைப் பெற்றுள்ளோம்! அவர்களது சூழ்ச்சிகளை மக்கள் துணையோடு முறியடித்துள்ளோம்!

இதில் இறுதி வெற்றி, உறுதியாக சொல்கிறேன், நமக்குத்தான். அத்தகைய நம்பிக்கையுடன் நாம் போராடுவோம். நாங்கள் சட்டமன்றத்தில் போராடுகிறோம். ஆசிரியர் அவர்களும், அண்ணன் வைகோ போன்றவர்களும் மக்கள் மன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.

அதே நேரத்தில் ஆசிரியர் அவர்களுக்கும் - அண்ணன் வைகோ அவர்களுக்கும் - உங்களது உடன்பிறப்பு என்ற வகையில் ஒரு அன்பான வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். இருவரும் உங்கள் உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். நாடு வாழ - இந்த இனம் மேன்மை அடைய உங்களது உடல் நலம் எங்களுக்கு முக்கியம். எங்களுக்கு என்று சொல்வது, இந்த நாட்டுக்கு மிக முக்கியம். 

அண்ணன் வைகோ அவர்களின், கால்கள் படாத இடமே தமிழ்நாட்டில் இருக்க வாய்ப்பே இல்லை. எத்தனையோ நடைபயணங்களை நடத்தியவர். இன எழுச்சியை ஏற்படுத்தியவர் உருவாக்கியவர். நீங்கள் எல்லாம் விரும்பிய தந்தை பெரியாரின் ஆட்சி, பேரறிஞர் அண்ணாவின் ஆட்சி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சி இப்போது நடந்து கொண்டிருக்கிறது” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Next Story