“பொது இடத்தை கடவுளே ஆக்கிரமித்தாலும் அதை அகற்ற கோர்ட் உத்தரவிடும்” - நீதிபதி அதிரடி கருத்து


“பொது இடத்தை கடவுளே ஆக்கிரமித்தாலும் அதை அகற்ற கோர்ட் உத்தரவிடும்” - நீதிபதி அதிரடி கருத்து
x
தினத்தந்தி 25 March 2022 4:08 PM IST (Updated: 25 March 2022 4:08 PM IST)
t-max-icont-min-icon

பொது இடத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை என ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் அமைந்துள்ள ஒரு அம்மன் கோவிலில், பொது சாலையை ஆக்கிரமித்து கட்டுமானம் மேற்கொண்டுள்ளதாகவும், இந்த கட்டுமானம் தங்களுக்கு உரிய இடத்திற்கு செல்லும் வழியை தடுக்கும் வகையில் உள்ளதாகவும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாப்பாயி என்பவர் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கோவில் தரப்புக்கு எதிரான உத்தரவை பிறப்பித்தார். அதனை எதிர்த்து கோவில் நிர்வாகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். 

விசாரணையின் முடிவில், குறிப்பிட்ட அந்த பொதுப் பாதையில் கோவில் நிர்வாகம் கட்டியிருக்கும் அனைத்து கட்டுமானங்களையும் இரண்டு மாதங்களில் அப்புறப்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 

அதே சமயம் இந்த உத்தரவில் நீதிபதி சில கருத்துக்களையும் பதிவு செய்துள்ளார். அதில், “பொது சாலையை யார் ஆக்கிரமித்தாலும் அதை தடுக்க வேண்டும். கோவில் என்ற பெயரில் பொது இடத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற எண்ணம் சிலரிடம் உள்ளது. கடவுளே பொது இடத்தை ஆக்கிரமித்திருந்தாலும், அதனை அகற்றும்படி கோர்ட் உத்தரவிடும்” என்று கூறியுள்ளார்.

கடவுளின் பெயரில் பொது இடத்தில் கோவில் கட்டி நீதிமன்றத்தின் கண்ணை மறைக்க முடியாது என்று தெரிவித்துள்ள நீதிபதி, ஏற்கனவே போதுமான எண்ணிக்கையில் கோவில்கள் இருக்கும் நிலையில், பொது இடத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். 

Next Story