அருங்காட்சியகங்கள், உணவுப்பூங்கா அமைத்து ஜவ்வாதுமலை சுற்றுலாதலம் மேம்படுத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ஜவ்வாதுமலை சுற்றுலா தலத்தை அருங்காட்சியகம், சிறுதானிய உணவு பூங்கா போன்றவை ஏற்படுத்தி மேம்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வட ஆற்காடு மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்து பிரிந்து 1989-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதி முதல் இயங்கி வருகிறது. இந்த மாவட்டத்தின் வடக்கே வேலூர் மாவட்டமும், கிழக்கே காஞ்சீபுரம் மாவட்டமும், தெற்கே விழுப்புரம் மாவட்டமும், மேற்கே கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டமும் எல்லைகளாக உள்ளன. இந்த மாவட்டம் ஆன்மிக சுற்றுலாவிற்கு புகழ் பெற்றதாகும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அருணாசலேஸ்வரர் கோவில், படவேடு ரேணுகாம்பாள் கோவில், தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோவில், தேவிகாபுரம் பெரியநாயகி கோவில் போன்ற புகழ்பெற்ற திருத்தலங்கள் அமைந்து உள்ளன.
இவை மட்டுமின்றி சாத்தனூர் அணை, பர்வதமலை, மாமண்டூர் குடைவரைக்கோவில்கள், திருமலை ஜெயின் கோவில், கூழமந்தல், பிரம்மதேசம் போன்ற பாரம்பரிய சுற்றுலா தலங்களும் உள்ளன. இந்த வரிசையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலையும் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது.
ஜவ்வாதுமலை
கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமாக ஜவ்வாது மலை உள்ளது. இந்த மலை சுமார் 260 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்து உள்ளது. இங்கு மலையாளிகள் என்ற பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கின்றனர். இங்கு 200-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இந்த மலையில் பாதிரி என்ற ஊரில் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த தடயங்களும், கீழ்செப்பிளி, மண்டபாறை ஆகிய இடங்களில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களும் உள்ளன. பல்லவர் காலம் முதல் நாயக்கர் காலம் வரையிலான பல்வேறு நடுகற்கள் இந்த மலையில் உள்ளன.
இங்கு சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவிலூர் சிவன் கோவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த மலையில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் காடுகள், நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள் காண்போரை பரவசப்படுத்தி வருகிறது. இந்த மலையின் மேல் பீமன் நீர்வீழ்ச்சி உள்ளது. சீசன் சமயங்களில் இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் விழும் அழகு காண்போரை பரவசப்படுத்தும்.
சிறுதானிய பயிர்
இங்குள்ள மக்கள் தினை, சாமை, வரகு போன்ற சிறுதானியங்கள் பயிரிடுகின்றனர். தேன், மிளகு, பழ வகைகளும் இந்த மலை வாழ்மக்களின் வாழ்வாதாரமாக திகழ்கின்றன. இங்குள்ள தேன், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. இங்கு படகு குழாம், பூங்கா, கோவிலூர் சிவன் கோவில், காவலூரில் உள்ள வைனுபாப்பு விண்வெளி ஆய்வு மையம், அமிர்தி வன விலங்கு சரணாலயம் ஆகியன முக்கிய சுற்றுலா இடங்கள் ஆகும்.
படகு குழாமில் சவாரி மேற்கொள்வதற்கு தற்போது 4 படகுகள் மட்டுமே உள்ளது. இதனை மக்கள் வருகைக்கு ஏற்ப அதிகரிக்க வேண்டும். ஜவ்வாது மலைக்கு போளூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆலங்காயம், அமிர்தி ஆகிய ஊர்களில் இருந்து பஸ் வசதிகள் உள்ளன. ஜமுனாமரத்தூரில் இருந்து செங்கத்திற்கு சாலை வசதி உள்ளது. ஆனால் தற்போது பஸ் போக்குவரத்து இல்லை. எனவே இந்த வழித்தடத்தில் பஸ் வசதி ஏற்படுத்தி தர பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
விடுதி வசதி
ஜவ்வாதுமலையில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோடை விழா ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் நடைபெறும். இவ்விழாவின் போது இங்குள்ள மலைவாழ் மக்களின் படைப்புகள், காட்டு பொருட்கள், மலர்கள், காய்கனிகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும். மேலும் விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படும். இந்த ஜவ்வாதுமலைக்கு சீசன் சமயங்களிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மட்டுமே மக்கள் வருகை உள்ளது. மற்ற நாட்களில் குறைந்த அளவிலான மக்களே வருகின்றனர். மேலும் அருவியில் நீர் விழுந்தால் மட்டுமே மக்களும் ஜவ்வாதுமலைக்கு வருகின்றனர்.
ஜவ்வாது மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஓரிரு நாட்கள் அங்கு தங்கி இருந்தால் மலை வாழ் மக்களின் வாழ்வாதாரம் உயர வாய்ப்புகள் உள்ளது. சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு ஜவ்வாதுமலையில் போதிய விடுதி வசதிகள் இல்லாததால் காலையில் வரும் சுற்றுலா பயணிகள் மாலையில் மலையில் இருந்து இறங்கி விடுகின்றனர். எனவே ஜவ்வாதுமலையில் அரசு சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான விடுதி வசதிகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செயற்கை நீருற்று
மேலும் அனைத்து நாட்களும் மக்கள் வருகையை அதிகரிக்க செய்யும் வகையில் ஜவ்வாதுமலையில் செயற்கை நீருற்று, பெரிய அளவிலான சிறுவர்கள் விளையாடி மகிழும் வகையில் விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய பூங்காக்கள் அமைக்கலாம். இங்குள்ள மலைவாழ் மக்களின் பாரம்பரியத்தை வைத்து அருங்காட்சியகங்கள், மலர் பூங்காக்கள் ஏற்படுத்தி ஜவ்வாதுமலை சுற்றுலா தலத்தை மேம்படுத்த வேண்டும். மலையில் உள்ள உணவு பொருட்களை வைத்து உணவு பூங்கா ஏற்படுத்த வேண்டும்.
மேலும் ஜவ்வாதுமலையில் நூற்றுக்கணக்கான தொல்லியல் சுவடுகள் கண்டறியப்பட்டு உள்ளன. இதை வைத்தும் அங்கு பெரிய அளவிலான அருங்காட்சியகம் போன்றவை அமைக்கலாம். இதனால் ஜவ்வாதுமலையில் உள்ள மலை வாழ் மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும், பொதுமக்களுக்கும் குடும்பத்தினருடன் மலை பகுதிக்கு சுற்றுலா சென்று வந்த மகிழ்ச்சி ஏற்படும். இதற்கு முக்கியமாக ஜவ்வாதுமலைக்கு காலை முதல் மாலை வரை விரிவான போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். ஜவ்வாதுமலை சுற்றுலா தலத்தை மேம்படுத்த அரசு முன் வர வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story