தமிழகத்தில் புதிதாக கட்டப்படும் கட்டிடங்கள் 80 ஆண்டுகள் நீடிக்கும் வகையில் தரமாக கட்ட வேண்டும்: வீட்டு வசதி துறை அமைச்சர்
தமிழகத்தில் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களின் தரம் 80 ஆண்டுகள் வரை இருக்கும் வகையில் கட்ட வேண்டும் என்று தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி சென்னையில் கூறினார்.
கட்டுமான வாரியம்
சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இந்திய ரியல் எஸ்டேட் மேம்படுத்துபவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்) சார்பில், சென்னையில் நம்பகத்தன்மை, அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் எப்போதும் இல்லாத வகையில் மிகக்குறைந்த விலையில் வீடுகள் விற்பனை, குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டு கடன்கள் அனுமதி உள்ளிட்டவற்றை அளிப்பதற்காக கடந்த 4-ந் தேதியில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் கண்காட்சியை நடத்தி வருகிறது.
இதில் 80-க்கும் மேற்பட்டவர்கள் அமைத்துள்ள 450-க்கும் மேற்பட்ட சிறந்த வீடுகள் உள்ள இடங்கள் அடங்கிய அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கண்காட்சியில் தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வீட்டுமனை உள்ளிட்டவை ரூ.25 லட்சத்தில் இருந்து பல கோடி ரூபாய் வரை விற்பனையில் உள்ளது. இவற்றை வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி நேற்று பார்வையிட்டு, ‘ரியல் எஸ்டேட் துறையின் தொலைநோக்கு பார்வை 2030’ என்ற திட்டத்தையும், 1 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் நலன் மற்றும் காப்பீட்டு திட்டத்தையும் தொடங்கி வைத்தார். அதற்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொண்ட அமைச்சர், தமிழ்நாடு கட்டுமான வாரியத்தின் தலைவர் பொன்குமாரிடம் அதனை வழங்கினார். நிகழ்ச்சிக்கு, கிரெடாய் தலைவர் பதம் துகர் தலைமை தாங்கினார்.
தரமான கட்டிடங்கள்
தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி பேசியதாவது:-
கிரெடாய் சார்பில் கொண்டுவரப்படும் அனைத்து திட்டங்களுக்கும் அரசின் அத்தனை உதவிகளும் செய்து தரப்படும். குறிப்பாக, கட்டுமான நிறுவனங்களுக்கு திட்ட அனுமதி உள்ளிட்ட பணிகள் காலதாமதம் இல்லாமல் உடனுக்குடன் வழங்குவதற்காக காலிப்பணியிடங்கள் நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும், அதுதொடர்பான கருத்துகளை கிரெடாயினரும் அளிக்கலாம். குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் பழைய கட்டிடங்கள் சரி செய்யப்பட உள்ளது. கடந்த காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் தரம் குறைவாக உள்ளன. 50 முதல் 100 வருடங்கள் தாங்கும் வகையில் தரமான கட்டிடங்கள் கட்ட வேண்டும். தரமில்லாத கட்டிடங்களை இனிமேல் கட்ட கூடாது.
80 ஆண்டுகள்...
அரசு மற்றும் கட்டுமான துறைக்கு பொறுப்பு இருப்பதால் புதிதாக கட்டப்படும் தனியார் மற்றும் அரசு கட்டிடங்கள் தரம் மிக்கதாக இருக்க வேண்டும். குறிப்பாக, இன்றைக்கு கட்டுமான துறையில் அதி நவீன முறைகள் வந்துவிட்டதால், புதிதாக கட்டப்படும் கட்டிடங்களின் தரம் 80 ஆண்டுகள் வரை இருக்கும் வகையில் தரமாக கட்டப்பட வேண்டும். அதில் கவனத்துடன் செயல்படுகிறோம். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் திட்ட அனுமதி முறையை அரக்கோணம் வரை விரிவாக்கம் செய்யும் பணி இன்னும் ஒரு மாத காலத்தில் படிப்படியாக முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
‘பெத்தேல் நகரில் இருந்து மக்களை அப்புறப்படுத்தும் திட்டம் இல்லை’
அமைச்சர் முத்துசாமி பேசுகையில், ‘பக்கிங்காம் கால்வாயில் பாலம், இருபுறமும் சாலை அமைக்க பெத்தேல் நகரில் ஆய்வு செய்தோம். அப்பகுதியில் ஏராளமான குடிசைகள் உள்ளதை அறிந்தோம். இந்த இடம் தொடர்பாக கோர்ட்டில் சில கருத்துக்கள் சொல்லப்பட்டு உள்ளது. அவர்களை அப்பகுதியில் இருந்து நிச்சயமாக அப்புறப்படுத்தும் திட்டம் அரசுக்கு இல்லை, அப்பகுதியை அழகுபடுத்த அரசு ஆலோசனை செய்து வருகிறது. ஆகையால் பெத்தேல் நகரில் மூன்றில் ஒரு பங்கு மொத்தமுள்ள 163 ஏக்கரில் 50 ஏக்கரில் அப்பகுதி மக்களுக்கு புதிய வீடுகள் கட்டி தர முதல்-அமைச்சர் கூறியுள்ளார்’ என்று தெரிவித்தார்.
பங்கேற்பு
முன்னதாக கிரெடாய் ஒருங்கிணைப்பாளர் எம்.என். அருண் வரவேற்றார்.
விழாவில் சென்னை நகரப்புற வீட்டு வசதி துறை முதன்மை செயலாளர் ஹிதேஷ் குமார் மக்வானா, சென்னை பெருநகர வளர்ச்சிகுழுமத்தின் உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ரா, நகர்புற திட்டமிடல் துறை இயக்குனர் சரவணவேல்ராஜ், கிரெடாய் செயலாளர் எம்.ஆறுமுகம், துணை ஒருங்கிணைப்பாளர் அபிஷேக் மேத்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story