3 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
கீழே தள்ளியதில் காயமடைந்த முதியவர் இறந்த வழக்கில் 3 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கீழே தள்ளியதில் காயமடைந்த முதியவர் இறந்த வழக்கில் 3 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
மது குடித்த தகராறு
புதுச்சேரி சுத்துக்கேணி காலனி புதுநகர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 65). இவருக்கு பழனிசாமி, பத்மநாபன் என 2 மகன்கள் உள்ளனர். கடந்த 29.4.2013 அன்று வீட்டின் அருகில் பத்மநாபன் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மது குடித்துக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராம்குமாருக்கும் பத்மநாபனுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதன்பின் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். ஆனாலும் ஆத்திரத்தில் இருந்த ராம்குமார் தனது உறவினர்களான வெற்றி என்கிற வெற்றி வேலன், அய்யனார் ஆகியோருடன் சேர்ந்து பத்மநாபனின் வீட்டுக்குச் சென்று அவரை சரமாரியாக தாக்கினர்.
இதைப்பார்த்ததும் பத்மநாபனின் தந்தை குப்புசாமியும், சகோதரர் பழனிசாமியும் அவர்களை தடுத்தனர். அப்போது தள்ளி விட்டதில் கீழே விழுந்த குப்புசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அங்கிருந்து ராம்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் தப்பி ஓடி விட்டனர். வீட்டில் இருந்தவர்கள் குப்புசாமியை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி 2 நாட்களுக்கு பிறகு உயிரிழந்தார்.
7 ஆண்டுகள் சிறை
இதுகுறித்து காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்குமார், வெற்றி என்கிற வெற்றி வேலன், அய்யனார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் இது தொடர்பாக புதுச்சேரி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி தாமோதரன் இன்று தீர்ப்பு கூறினார். இதில் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார், வெற்றி என்ற வெற்றி வேலன், அய்யனார் ஆகிய 3 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாலமுருகன் ஆஜரானார்.
Related Tags :
Next Story