கீ கொடுத்தால் கைதட்டும் பொம்மை போல் செயல்படுகிறார் மு.க.ஸ்டாலின்- எடப்பாடி பழனிசாமி தாக்கு
அ.தி.மு.க. அரசின் திட்டங்களை எடுத்துச் சொல்லி சிந்தாமல், சிதறாமல் வாக்குகளை பெறுங்கள் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
தாம்பரத்தை அடுத்த சேலையூர் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
தாம்பரம் மாநகராட்சி புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாநகராட்சி. முதல் வெற்றி அ.தி.மு.க. வெற்றியாக இருக்க வேண்டும். கழக நிர்வாகிகள் வெற்றிக்காக உழைக்க வேண்டும். ஒற்றுமை மிகவும் முக்கியம் ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றி வாகை சூட வேண்டும். சிலருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும் பலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கும். அதனால் மனம் தளராமல் அ.தி.மு.க. வெற்றிக்காக அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். ஸ்டாலின் பல பொதுக்கூட்டங்களில் பேசும்போது அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என பொய் பிரசாரம் செய்து வருகிறார்.
அ.தி.மு.க. செயல்படுத்திய திட்டங்கள் தான் தற்போது முதல்-அமைச்சர் திறந்து வைத்து வருகிறார். இது நாம் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைப்பது போல் உள்ளது.
ஸ்டாலின் பேசும் போதெல்லாம் தி.மு.க. 70 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக பொய் பேசுகிறார். ஸ்டாலினுக்கு பொய் பேசுவதற்கு நோபல் பரிசு வழங்கலாம்.
ஒரு சில வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. ஆனால் 70 சதவீதம் இடைவிடாது உள்ளதாக பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்த 525 வாக்குறுதிகளில் 70 சதவீதம் என்றால் 400-க்கு மேல் செய்திருக்க வேண்டும் அப்படி எங்கு என்ன செய்துள்ளார்கள்.
மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சொன்னார்கள் கொடுத்தார்களா? நீட் தேர்வை ரத்து செய்வேன் என்றார். ஏதாவது செய்தாரா? டீசல் விலையை குறைப்பேன் என்று அந்த வாக்குறுதியை நிறைவேற்றினாரா? 70 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளேன் என பொய் பிரசாரம் செய்கிறார்.
எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளீர்கள் கேட்டால் நாங்கள் ஆட்சிக்கு பொறுப்பு ஏற்று சிறிது காலம் தானே ஆகிறது என கூறுகிறார்கள்.
விளையும் பயில் முளையிலேயே தெரியும். இந்த ஆட்சி சவல குழந்தை மாதிரி எங்கே எழுந்து நடக்க போகுது.
கீ கொடுத்தால் கைதட்ட கூடிய பொம்மை போல் செயல்படுகிறார் மு.க.ஸ்டாலின்.
உதயநிதி ஸ்டாலின் 2021 பொது தேர்தலின் போது நீட் தேர்வு பற்றி பேசியபோது ஆட்சியாளர்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் நீட் தேர்வை ரத்து செய்திருக்க வேண்டும் என்று பேசினார்.
தற்போது தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வை ரத்து செய்தார்களா மேலும் உதயநிதி பேசும்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்ய தங்களிடம் ஒரு ரகசியம் உள்ளதாக தெரிவித்தார்.
ஆனால் இன்று அவரை ஆளையே காணவில்லை. அவர் கூறிய ரகசியத்தை வைத்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டியது தானே? நீட் என்ற பெயரை கொண்டு வந்தது தி.மு.க.வும், காங்கிரசும் தான் ஆதாரம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story