ககன்யான் திட்டத்திற்கான ‘விகாஸ்’ என்ஜின் வெற்றிகரமாக பரிசோதனை


ககன்யான் திட்டத்திற்கான ‘விகாஸ்’ என்ஜின் வெற்றிகரமாக பரிசோதனை
x
தினத்தந்தி 20 Jan 2022 9:12 PM IST (Updated: 20 Jan 2022 9:12 PM IST)
t-max-icont-min-icon

மகேந்திரகிரி மையத்தில் 25 வினாடிகளுக்கு ‘விகாஸ்’ என்ஜின் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது

திருநெல்வேலி,

பூமியில் இருந்து மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் திட்டத்திற்கான பணிகளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’ மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு ‘ககன்யான்’ என பெயரிடப்பட்டுள்ளது. ககன்யான் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2018 ஆம் ஆண்டு தனது சுதந்திர தின உரையின் போது அறிவித்தார்.

ககன்யானின் நோக்கம், மனிதர்களை குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அனுப்பி, அவர்களைப் பாதுகாப்பாக பூமிக்குக் திரும்ப கொண்டுவருவதில் இந்தியாவின் திறனை நிரூபிப்பதே ஆகும். ககன்யான் திட்டம் வெற்றியடைவதன் மூலம், மனிதர்களை விண்வெளிக்கு கொண்டுசெல்லும் உலகின் 4-வது நாடாக இந்தியா உருவெடுக்கும். ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி வைத்துள்ளன. 

ககன்யான் திட்டத்தின்படி மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்பாக 2 முறை ஆளில்லா விண்கலங்கள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதில் ஒரு விண்கலத்தை இந்த ஆண்டிற்குள் விண்வெளியில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 

அந்த வகையில் ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ள ‘விகாஸ்’ என்ஜின் இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்தில் நடைபெற்ற இந்த சோதனையில், 25 வினாடிகளுக்கு விகாஸ் என்ஜினின் செயல்திறன் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் வினாடிகள் அதிகரிக்கப்பட்டு அடுத்தகட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story