முககவசம் அணியச்சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்திய மு.க.ஸ்டாலின்


முககவசம் அணியச்சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்திய மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 5 Jan 2022 4:27 AM IST (Updated: 5 Jan 2022 4:27 AM IST)
t-max-icont-min-icon

தலைமைச்செயலகத்தில் இருந்து வீடு திரும்பிய போது சாலைகள், பஸ் நிறுத்தங்களில் முககவசம் அணியாமல் இருந்த பொதுமக்களிடம் அதனை அணியச்சொல்லி வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது முககவசம் இல்லாதவர்களுக்கு, தன்னுடைய வாகனத்தில் இருந்து அதனை எடுத்து கொடுத்தார்.

சென்னை,

கொரோனா தொற்றின் தாக்கம் எப்போது குறையும்? என்று அனைவரும் எதிர்பார்த்து காத்து இருந்த நேரத்தில், தற்போது மீண்டும் அது உருமாறி உலகையே நடுநடுங்க வைத்து கொண்டு இருக்கிறது.

தமிழகத்திலும் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது. தமிழக அரசும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது. முககவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி கொண்டு தான் இருக்கிறது.

முககவசம் அணிய சொன்ன மு.க.ஸ்டாலின்

இதேபோல், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும், தடுப்பூசி செலுத்துவது, முககவசம் அணிவதை வலியுறுத்தி தான் பேசி வருகிறார். நேற்று முன்தினம் சென்னையில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசும்போது கூட, ‘நோயின் தாக்கத்தை தடுக்க நமக்கு முன்னால் இருக்கக்கூடிய கேடயம், முககவசம் தான்' என்று பேசினார். இப்படியாக முககவசம் அணிவது பற்றி தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.

இந்தநிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நேற்று காலை தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின், பின்னர் வாகனத்தில் வீடு திரும்பினார். அப்போது அண்ணா சாலை வழியாக செல்லும் போது, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை அருகில் உள்ள பஸ் நிறுத்தம், ரிச்சி தெரு அருகில், காஸ்மாபாலிடென் கிளப் அருகில், ஸ்பென்சர் பிளாசா எதிரில், ஆயிரம் விளக்கு பகுதி, சேப்பாக்கம், தேனாம்பேட்டை சித்தி விநாயகர் கோவில் தெரு, எல்டாம்ஸ் சாலை சிக்னல், எஸ்.ஐ.இ.டி. கல்லூரி பஸ் நிலையம் மற்றும் அண்ணா சாலை பெரியார் சிலை அருகில் உள்ள பகுதிகள், தலைமை தபால் அலுவலகத்துக்கு அருகில் உள்ள பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் முககவசம் அணியாமல் அலட்சியமாக இருந்த பொது மக்களிடம் முககவசம் அணிய சொன்னார்.

விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

சில இடங்களில் அவர் வாகனத்தை விட்டு கீழே இறங்கி, முககவசத்தை சரியாக அணியாமல் இருந்தவர்களை பார்த்து முககவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முககவசம் இல்லாதவர்களுக்கு தன்னுடைய வாகனத்தில் இருந்த முககவசத்தை எடுத்தும் கொடுத்தார்.

சிலருக்கு அவரே முகத்தில் மாட்டியும் விட்டார். அவ்வாறு மக்களை சந்தித்தபோது அவர்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story