பூந்தமல்லியில் உள்ள போலீஸ் நிலையத்திற்குள் புகுந்த மழைநீர்..!
பூந்தமல்லியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் மழை நீர் முழங்கால் அளவு தேங்கி உள்ளது.
பூந்தமல்லி,
எதிர்பாராத மழை காரணமாக சென்னை நகர மக்கள் நேற்று இரவு கடும் அவதியை சந்திக்க நேரிட்டது. எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாததால் மக்களால் உடனடியாக பலத்த மழை பாதிப்பில் இருந்து தப்ப முடியாத நிலை உருவானது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடாமல் மழை பெய்ததால் முதல் 2 மணி நேரத்திலேயே தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பிற்பகல் 3 மணிக்கெல்லாம் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல பிரதான சாலைகள் குளம்போல மாறின.
பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் மழை நீர் முழங்கால் அளவு தேங்கி உள்ளது.
குறிப்பாக தரை தளத்தில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால் தரைத்தளத்தில் உள்ள வீட்டில் வசிக்கும் போலீசார் மாடியில் உள்ள மற்ற போலீசாரின் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். தற்போது பூந்தமல்லியில் உள்ள போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் மழைநீர் குளம்போல் சூழ்ந்துள்ளதால் போலீசார் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக இந்த பகுதியில் தேங்கி இருந்த மழைநீரை அகற்ற கால தாமதம் ஏற்பட்ட நிலையில், தற்போது மழை விட்ட பிறகும் அதற்கான பணிகள் ஏதும் செய்யாமல் இருந்ததால் மீண்டும் மழைநீர் போலீஸ் குடியிருப்புகளுக்குள் புகுந்து உள்ளதாக போலீசார் புகார் தெரிவித்தனர்.
அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்குள் மழைநீர் புகுந்ததால் போலீஸ் நிலையத்தில் வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் நனையாமல் இருப்பதற்காக டேபிளின் மீது எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் புகார் சம்பந்தமாக விசாரணை செய்ய முடியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையின் காரணமாக இந்த பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்காததால் தற்போது பெய்த மழைக்கு முன்பைவிட மேலும் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story