வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ1 கோடியே 65 லட்சம் மோசடி பெண் உள்பட 6 பேர் மீது வழக்கு


வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கூறி    ரூ1 கோடியே 65 லட்சம் மோசடி பெண் உள்பட 6 பேர் மீது  வழக்கு
x
தினத்தந்தி 28 Dec 2021 9:19 PM IST (Updated: 28 Dec 2021 9:19 PM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக 179 பேரிடம் ரூ.1.65 கோடி மோசடி செய்ததாக பெண் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி
வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக 179 பேரிடம் ரூ.1.65 கோடி மோசடி செய்ததாக பெண் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு

புதுவை எல்லைப்பிள்ளைசாவடி பாலதண்டாயுதம் வீதியை சேர்ந்தவர் ஸ்டீபன் நித்தியானந்தம் (வயது 57). இவர் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் மதபோதகராக உள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு இவருக்கு சாரம் பகுதியை சேர்ந்த ஜான்சன், சைமன் ஜோஸ்வா ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். அவர்கள் தங்களுக்கு தெரிந்த கோவையில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த ரமணி என்பவர் மூலம் கனடா நாட்டில் வேலைவாய்ப்புகள் பெறலாம் என்று கூறியுள்ளார்.

வங்கிக்கணக்கில் செலுத்தம்

இதற்காக முதல் தவணையாக ரூ.1 லட்சம் தரவேண்டும், பின்னர் மீதித்தொகையை வேலைவாய்ப்பு கிடைத்ததும் தந்தால் போதும் என்று கூறினார். இதனை நம்பி நித்யானந்தம் தனக்கு தெரிந்தவர்களிடம் கூறியுள்ளார். அதன்பேரில் 179 பேரிடம் ரூ.1 கோடியே 65 லட்சம் வசூலிக்கப்பட்டது.
அதனை ரமணியிடம் கொடுக்க முயற்சி எடுத்தபோது அவர் சிலரது வங்கிக்கணக்குகளை கூறி அதில் போட கூறியுள்ளார். அதன்படி 35 வங்கிக்கணக்குகளில் அந்த பணத்தை செலுத்தியுள்ளார்.

மோசடி வழக்கு

ஆனால் அவர்கள் கூறியபடி வெளிநாட்டில் வேலைவாங்கி தரவில்லை. இதுதொடர்பாக பணம் கொடுத்தவர்கள் ஸ்டீபன் நித்யானந்தத்திடம் கூறி பணத்தை பெற்றுத்தருமாறு வலியுறுத்தினார்கள். ஜான்சனிடம் இதுதொடர்பாக கேட்டு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து ஸ்டீபன் நித்தியானந்தம் சி.பி.சி.ஐ.டி.போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நியூட்டன் பணமோசடி செய்ததாக ரமணி, ஜான்சன், சைமன்ஜோஸ்வா மற்றும் கிருஷ்ணவேணி, தமிழ்செல்வன், நிக்கோலஸ் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வேலை வாங்கி தருவதாக ரூ.1.65 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story