கடற்கரை சாலையில் சுனாமி பேரிடர் மீட்பு ஒத்திகை


கடற்கரை சாலையில்  சுனாமி பேரிடர் மீட்பு ஒத்திகை
x

புதுச்சேரி கடற்கரை சாலையில் சுனாமி பேரிடர் மீட்பு படையினர் நடத்திய ஒத்திகையால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி கடற்கரை சாலையில் சுனாமி பேரிடர் மீட்பு படையினர் நடத்திய ஒத்திகையால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பேரிடர் ஒத்திகை
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாரம்பரிய மற்றும் கலாசார கட்டிடங்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், பேரிடரை எதிர்கொள்ளும் திறனை சோதிக்கும் பொருட்டும் சுனாமி பேரிடர் மீட்பு ஒத்திகை நடத்த புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு    படையின்  4-வது பட்டாலியன் மற்றும் புதுவையில் பல்வேறு துறைகள் சார்பில் நேற்று மாலை கடற்கரை சாலை காந்தி திடலில் சுனாமி பேரிடர் மீட்பு ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் சுனாமி பேரிடர் ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் செய்து காண்பிக்கப்பட்டது. 
சுனாமி எச்சரிக்கை
அதாவது திடீரென சுனாமி வந்து தாக்கி அதில் பொதுமக்கள் பாதிக்கப்படுவது போல ஒரு சம்பவம் உருவாக்கப்பட்டது. உடனே தேசிய பேரிடர் மீட்பு படையினர், காவல்துறை, உள்ளாட்சி துறை, தீயணைப்பு துறை மற்றும் தன்னார்வலர்கள்    உள்ளிட்ட பல்வேறு துறையினர் அங்கு விரைந்து வந்தனர். ஆம்புலன்சு வாகனமும் வரவழைக்கப்பட்டது.
கடற்கரை சாலையில் இருந்த பெண்கள், பெரியவர்கள், சிறுவர்களை மீட்பு படையினர் மற்றும் தன்னார்வலர்கள் மீட்டு அவர்களை குண்டு கட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 
மேலும், சுனாமி தாக்கியதில் காயம்     அடைந்தவர் கள் மற்றும் கடலில் மூழ்கியவர்களை மீட்டு ஸ்ட்ரச்சர் மூலம் ஆம்புலன்சுக்கு கொண்டு வந்தனர். பின்னர் காயம் அடைந்தவர்கள், சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பரபரப்பு
ஆம்புலன்ஸ் செல்லும் பாதையில் பணியில் ஈடுபட்ட போலீசார் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி ஆம்புலன்ஸ் இடையூறு இன்றி செல்ல வழி ஏற்படுத்தினர். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளும், கடற்கரைக்கு வந்த பொதுமக்களும் அதை உண்மை என்று நம்பி பதற்றமடைந்தனர். இதனால் நேற்று மாலை கடற்கரை சாலை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
இது ஒத்திகை நடவடிக்கை தான் என்பது பற்றி அவர்களுக்கு போலீசார் மைக் மூலம் விளக்கமளித்தனர்.    அதன் பிறகே அவர்கள்   நிம்மதி பெருமூச்சு விட்டனர்

Next Story